மாவட்டத்தில் அடகு நகை மீட்க, மாடு வாங்க சென்றவரிடம் ரூ.18.56 லட்சம் பறிமுதல்
ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் நேற்று மாடு வாங்க சென்றவர், கொத்தனார், அடகு நகை திருப்ப சென்றவர் ஆகியோரிடம் ரூ.18.56 லட்சம் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி - புள்ளிமான்கோம்பை ரோட்டில் டி.சேடபட்டி விலக்கு அருகே நாகராஜ் தலைமையிலான நிலைக் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக சென்ற திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா குன்னத்துப்பட்டி சேர்ந்த கொத்தனார் அமிர்தராஜ் சென்ற டூவீலரை சோதனையிட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஸ்ரீரங்கபுரத்தில் சரவணன் வீடு கட்டுவதற்காக கான்ட்ராக்ட் பேசி முன் பணமாக ரூ.1.80 லட்சம் பெற்று வந்ததாக அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
ரூ.93 ஆயிரம் பறிமுதல் சின்னமனூர்: வேப்பம்பட்டியில் பறக்கும்படை அலுவலர் மகா விஷ்ணு தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த தெய்வம் 63, என்பவரிடம் சோதனை செய்த போது ரூ.93 ஆயிரம் உரிய ஆவணங்களின்றி இருந்தது.
விசாரணையயில் மாடு வாங்க பணம் கொண்டு சென்றதாக கூறினார். பறிமுதல் செய்த பணம் உத்தமபாளையம் கிளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.73 ஆயிரம் பறிமுதல் போடி: வீரபாண்டி தாடிச்சேரி மெயின் ரோட்டில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அருண்குமார் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். இதில் டூவீலரில் வந்த கம்பம் பைனான்சில் வேலை செய்யும் சிவகங்கை மாவட்டம், தர்மாபட்டி வெற்றிச்செல்வன் 23, என்பவரிடம் தாடிச்சேரியில் வசூலித்த ரூ.73 ஆயிரம் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்துள்ளார். பணத்தை பறிமுதல் செய்து போடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பால் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் பறிமுதல் போடி: சிலமலை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நவநீத பாண்டியன் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிலமலை பால் வியாபாரி செல்வராஜ் 57. போடியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக டூவீலரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.15 லட்சம் கொண்டுவந்தார். ஆவணம் இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.