தேர்தலுக்கான வாகன ஏற்பாடு: ஆர்.டி.ஓ. நியமிக்காததால் சிக்கல்

திருப்பூர்:திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு தொகுதியிலும் ஆர்.டி.ஓ. பணியிடத்தில் பொறுப்பு அலுவலர்கள் உள்ளதால், தேர்தலுக்கான வாகன ஏற்பாடு செய்வதில் நடைமுறை சிக்கல் எழும் சூழல் உருவாகியுள்ளது.

வேட்பு மனு தாக்கல், 30ம் தேதி துவங்கும் நிலையில், ஓட்டுப்பதிவு, ஏப். 23ம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு நாளில் பயன்படுத்தும் பேலட் மெஷின், கன்ட்ரோல் யூனிட், 'விவிபேட்' உட்பட 20க்கு மேற்பட்ட பொருட்கள் அடங்கிய பார்சல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும்.

கடந்த தேர்தலில் போது மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளுக்கு, 800 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய வடக்கு ஆர்.டி.ஓ. ஜெயதேவராஜ், ஒன்றரை ஆண்டுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தெற்கு ஆர்.டி.ஓ.வாக இருந்த வெங்கிடுசாமி, வடக்கு பகுதியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், மினிபஸ் ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம், முறைகேட்டில் ஈடுபட்டதாக, வெங்கிடுசாமி ஸ்ரீ ரங்கத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த, 18 ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதனால், தாராபுரம் ஆர்.டி.ஓ. பழனியப்பன், திருப்பூர் தெற்கு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வெங்கிடுசாமி பொறுப்பு வகித்த வந்த திருப்பூர் வடக்கு, கோவை மண்டல பறக்கும் படை வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பொறுப்பில் உள்ள அலுவலர்கள் அவரவர் பணிபுரியும் தொகுதியில் வாகன வசதி ஏற்பாடு செய்யும் பணியிடமும் கூடுதலாக இப்பணியும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பொறுப்பு பணியிடம் பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், தேவையற்ற தாமதத்தையும் உருவாக்கும். ஓட்டுப்பதிவு நாள் துவங்கி, ஸ்ட்ராங் ரூமுக்க ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சென்று சேரும் வரை வாகன ஏற்பாடுகள் தயாராக இருக்க வேண்டும்.

கடைசி நேர சிரமங்களை தவிர்க்க, தேர்தல் நாளுக்கு தேவையான வாகன வசதிகளை முன்கூட்டியே செய்ய ஏதுவாக, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குக்கு நிரந்தர வட்டார போக்குவரத்து துறை அதிகாரியை நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகியுள்ளது.

Advertisement