சிங்கபெருமாள் கோவிலில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவிலில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி நேற்று காலை விபத்துக்குள்ளானது.

மேல்மருவத்தூரில் இருந்து பாரத் பென்ஸ் டாரஸ் லாரி கருங்கற்கள் ஏற்றிக் கொண்டு ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 45, என்பவர், லாரியை ஓட்டி வந்தார்.

லாரி, சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அனுமந்தபுரம் சாலை சந்திப்பு வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலில் நின்றிருந்த ஆம்னி பேருந்து, தனியார் தொழிற்சாலை பேருந்து மற்றும் 'நிஷான் மேக்னடிக்' கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது நேற்று காலை மோதின.

இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பயணியர் சிலருக்கு காயம் ஏற்பட்டது. சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து லாரியை ஓட்டி வந்த சுரேஷ்குமார் பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement