நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவை மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை
காஞ்சிபுரம்:நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவையை, மீண்டும் துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரையில் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் காலை, 9:50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக மதியம், 1:30 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
அதே ரயில், அரக்கோணம் நிலையத்தில் மதியம், 1:45 மணிக்கு புறப்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக, மாலை, 4:15 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். இந்த ரயில் சேவையால், பல தரப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
கொரோனா காலத்திற்கு பின், இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் பின், மீண்டும் பகலில் மின்சார ரயில் சேவை துவக்கவில்லை.
இதனால், திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, நிறுத்தப்பட்ட பகல் மின்சார ரயில் சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.