வல்லக்கோட்டை முருகனுக்கு திருக்கல்யாண உத்சவம்
ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார்.
இக்கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 7:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடந்து, ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு, மணக்கோலத்தில் உற்சவ மூர்த்திகள் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
காலை 11:30 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, மாங்கல்யதாரணம் நடந்தது. பின்னர், உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவல குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ் செய்திருந்தனர்.