ஏகாம்பரநாதர் கோவிவில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா 14 நாட்கள் நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு, 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வந்ததால், இரண்டு ஆண்டுகளாக பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.
இதில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, வேதவிற்பன்னர்கள் கோவில் கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்தனர். அதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து ஏலவார்குழலி அம்பிகையுடன், பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பிகை கிளி வாகனத்திலும் உலா வந்தனர்.
இதில், ஆறாம் நாள் உத்சவமான வரும் 27ம் தேதி காலை 63 நாயன்மார்கள் உத்சவமும், இரவு வெள்ளி தேர் உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 28ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.
இதில், 10ம் நாளான மார்ச் 31ம் தேதி இரவு, பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடக்கிறது. ஏப்., 4ம் தேதி இரவு, பொன் விமானத்தில் திருமுறை உத்சவத்துடன் பங்குனி உத்திர திருகல்யாண பெருவிழா நிறைவு பெறுகிறது.