வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 சரிவு தங்கம் சவரனுக்கு ரூ.2,640 குறைவு
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய், ஆபரண தங்கம் சவரனுக்கு, 2,640 ரூபாய் சரிவடைந்தது.
சர்வதேச முதலீட்டாளர்கள், கடந்த மாதம் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். இதனால், நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியது.
இம்மாதம் தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 330 ரூபாய் குறைந்து, 13,620 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,640 ரூபாய் சரிவடைந்து, 1,08,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இம்மாதம் 1ம் தேதி, தங்கம் சவரன், 1,26,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிலோ, 3.25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு, 17,240 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 75,000 ரூபாய் சரிவடைந்துள்ளன.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடுகள், தொடர்ந்து கச்சா எண்ணெய் மீது உள்ளது. தற்போது, தங்கத்தின் மீதுள்ள முதலீடுகள் சற்று சரிந்துள்ளன.
''இந்த சரிவு தற்காலிகமானது. போர் முடிவுக்கு வரும் போது, தங்கம் விலை மிகவும் உயர வாய்ப்புள்ளது,” என்றார்.