ஓ.எம்.ஆரில் ரூ.1,500 கோடியில் குடிநீர் பணி முடிந்தும்..பயனில்லை! கம்பி நீட்டிய' நிறுவனங்களால் குடியிருப்புகளுக்கு சிக்கல்
சென்னை: ஓ.எம்.ஆரில், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் முடிந்தும், வீடுகளுக்கு இணைப்பு வழங்க முடியாமல், குடிநீர் வாரியம் திணறி வருகிறது. பல அடுக்குமாடி குடியிருப்புகளிடம் இருந்து கட்டுமான நிறுவனங்கள் வசூலித்த, ஐ.டி.சி., என்ற கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணத்தை, வாரியத்திற்கு செலுத்தாததே இதற்கு காரணம் என, அதிகாரிகள் புலம்புகின்றனர். சென்னை மாநகராட்சி, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு உட்பட்ட மத்திய கைலாஷ் முதல் நாவலுார் வரை, 180 அடுக்குமாடி குடியிருப்புகளில், 30,000 வீடுகள் உள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பிலும், 35 முதல் 700 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகள், வெவ்வேறு கட்டுமான நிறுவனங்களால், 2019க்கு முன் துவங்கி சமீபத்தில் முடிக்கப்பட்டு உள்ளன.
கட்டாயம் இவற்றில் வீடு வாங்குவதற்காக, குடியிருப்பு மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதோடு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, சாலை துண்டிப்பு, மின் இணைப்புக்கு என, ஒவ்வொரு வீட்டுக்கும், மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை, கட்டுமான நிறுவனங்கள் வசூலித்தன.
இதில் 29,000 முதல் 40,000 ரூபாய் வரை, ஐ.டி.சி., கட்டணமாக சி.எம்.டி.ஏ.,வுக்கு செலுத்தியிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் செலுத்திய பணத்தில், மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. குடிநீர், கழிவுநீர் இணைப்பு மற்றும் ஐ.டி.சி., கட்டணத்தை கட்டுமான நிறுவனங்கள் செலுத்தாமல் தவிர்த்துள்ளன.
இதனால், குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டப் பணி முடிந்த பகுதிகளில், குடியிருப்பாளர்கள் தனியாக பணம் செலுத்தி, இணைப்பு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அனைவரும் சேர்ந்து பணம் செலுத்தினால்தான், குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும். ஒருவர் பணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பு வழங்கப்படாது.
தற்போது, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள், துரைப்பாக்கம், அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முடிந்துள்ளன.
அங்குள்ள குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஐ.டி.சி., உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தாததால், பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரச்னை இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஓ.எம்.ஆரில், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் திட்டப்பணிகள் முடிந்த பகுதியில், குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க தயாராக உள்ளோம்.
இணைப்பு பெற அறிவுறுத்தினால், சில அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், ஏற்கனவே ஐ.டி.சி., மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்தியதாக கூறுகின்றனர்.
ஆனால், குடியிருப்புகளுக்கான தொகை, குடிநீர் வாரியத்திற்கு வந்து சேரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டி முடித்த குடியிருப்புகளில் தான், இந்த ஐ.டி.சி., கட்டண பிரச்னை உள்ளது.
கடந்த 2019க்கு பின் வீடு கட்டுவதற்கு ஒப்புதல் பெறும்போதே ஐ.டி.சி., கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அதற்கு முன் ஒப்புதல் பெற்று சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு, ஐ.டி.சி., கட்டணம் செலுத்தப்படாததால் சிக்கல் நிலவுகிறது.
உயர் அதிகாரிகள் தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது தான் குடிநீர் திட்டப்பணி நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@ நடவடிக்கை இல்லை கட்டுமான பணிகள் முடிந்தபின், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம், குடிநீர் வாரியத்தில் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று, சி.எம்.டி.ஏ., தடையின்மை சான்று வழங்குகிறது. இதில் நிர்வாக சிக்கல் ஏற்பட்டதால், வீட்டு உரிமையாளர் களிடம் வசூலிக்கும் பணத்தில் இருந்து, ஐ.டி.சி., கட்டணம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட சேவைக்கான பணத்தை அந்தந்த துறைக்கு செலுத்தியதை உறுதி செய்தபின், தடையின்மை சான்று வழங்க வேண்டும் என, 2019ல் அரசு உத்தரவிட்டது. ஆனால், உத்தரவுக்குமுன் பணி துவங்கிய கட்டுமான நிறுவனங்கள், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் துவங்காததை காரணம் காட்டி, ஐ.டி.சி., கட்டணம் செலுத்தாமல் தடையின்மை சான்று பெற்றுள்ளன. இதனால் திட்ட பணி எப்போது முடிகிறதோ, அப்போது மீண்டும் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஓ.எம்.ஆர்., முக்கிய வளர்ச்சி பகுதி என்பதால், அரசு உயர் அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஹர்ஷா கோடா, இணை நிறுவனர், போம்ரா என்ற ஓ.எம்.ஆர் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்புblock_B
@block_B@ ஏமாந்துவிட்டோம் எங்கள் குடியிருப்பில், 339 வீடுகளை ஒப்படைக்கும்போது, ஐ.டி.சி., கட்டணம், குடிநீர், கழிவுநீர், மின்இணைப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், கட்டுமான நிறுவனம் தனியாக வசூலித்தது. அதில் மின் இணைப்பு வழங்கினர். கடந்த ஆண்டு, திட்ட பணி முடிந்து குடிநீர் இணைப்புக்கு செல்லும்போது, ஐ.டி.சி., மற்றும் குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான கட்டணத்தை கட்டுமான நிறுவனம் செலுத்தவில்லை என தெரிந்தது. கேட்டபோது கட்டுமான நிறுவனம் முறையான பதில் கூறவில்லை. மீண்டும் ஒவ்வொரு வீட்டுக்கும், தலா 52,000 ரூபாய் வரை வசூலித்து, 1.62 கோடி ரூபாய் செலுத்தி, ஐ.டி.சி., கட்டணம் செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளோம். ஐ.டி.சி., கட்டணம் செலுத்தியதை உறுதி செய்தபின், கட்டுமான அனுமதி மற்றும் தடையின்மை சான்று வழங்கி இருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோம். - பிரபாகரன், சவோய் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க தலைவர், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம்,block_B
மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்
-
தேர்தல் பணிக்கு இடையூறு : பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'