செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 ஏரி, குளங்கள்..அழிவின் விளிம்பில்! தரிசு நிலங்களாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: செங்கை மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், தாங்கல் நீர் பிடிப்புகள் அழிவின் விளிம்பில் உள்ளன. நீர் நிலைகள் பாதுகாப்பில், தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாததே இதற்கு காரணம் என, இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் அதிக நீர்நிலைகள் உள்ள மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளதால், ஏரிகள் மாவட்டம் என, அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன.

ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள் மற்றும் 2,512 குளங்கள் உள்ளன. தவிர, உள்ளாட்சி நிர்வாகங்கள் கட்டுப்பாட்டில், 1,000க்கும் மேற்பட்ட தாங்கல்கள் உள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பதால், 1,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனியார் மற்றும் அரசு ஆக்கிரமிப்பு, போக்கு மற்றும் வரத்து கால்வாய்கள் கபளீகரம், குப்பை கொட்டுதல், காட்டு செடிகள் வளர்ந்து, நீர்த் தேக்கத்தை பாழ்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்களால், நீர்நிலைகளின் சுற்று பரப்பும், ஆழமும் குறைந்து வருகின்றன.

இதனால், முழு கொள்ளளவை எட்ட முடியாத இந்த நீர் நிலைகள், மழை காலத்திலும் பாதி அளவு கூட நீர் தேங்காமல், பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

எனவே, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பில், அரசு உரிய கவனம் செலுத்தி, போதிய நிதி ஒதுக்கி, எதிர்கால சந்ததியினரின் நலன் காத்திட வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் தினகரன் கூறியதாவது:

செங்கை மாவட்டத்தில், ஆக்கிரமிப்பிற்கு ஆட்படாத நீர் நிலைகள் எதுவுமில்லை. கரை பகுதிகள் மட்டுமல்லாது, ஒரு ஏரியிலிருந்து மற்றோர் ஏரிக்கு நீரை கடத்துகிற, கால்வாய்களும் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டன.

இதனால்தான், மழை காலத்தில் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேற வழியின்றி, ஊருக்குள் வெள்ளம் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை மீட்டெடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, நீர் நிலை பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி, முறையாக செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க, நீதி துறை, ஊடக துறை, பொது மக்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும்.

தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சித்தேரி, கடந்த 40 ஆண்டிற்கு முன், 70 ஏக்கர் பரப்பில் இருந்தது. தொடர் ஆக்கிரமிப்பால், தற்போது 31 ஏக்கர் பரப்பிற்கு சுருங்கிவிட்டது.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், வேங்கைவாசல் சித்தேரியில், சுற்றுச் சூழல் பூங்கா அமைக்க 3.56 கோடி ஒதுக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் பணி கள் நடக்கவில்லை என்பதால், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக விபரம் கேட்டபோது, போலியான டெண்டர் மூலம் 2.56 கோடி ரூபாய் கபளிகரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த நிதியை ஆட்டையை போட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை.

நடவடிக்கை செங்கை மாவட்டத்தில் 200 ஏரிகளை துார்வார 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த 2025, மே 16ல், திருப்போரூர் ஒன்றியம், தையூர் கடல் ஏரியில், பூமி பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டன.

கண்துடைப்பிற்காக ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சிறு குழி தோண்டப்பட்டது. அதன்பின், துார்வாரும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஏரிகள் துார்வாரும் பணிகள் முறையாக நடப்பதுபோல், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பரப்புரை செய்து மக்களை நம்ப வைத்தது.

நந்திவரம் -கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள கண்டிகை தாங்கல் ஏரி 11.24 ஏக்கர் பரப்பில் இருந்தது. இதில் 6 ஏக்கர் பரப்பு முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 5.24 ஏக்கர் பரப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றகோரி, 2018ம் ஆண்டு ஜூன் 16 மற்றும் 2024, செப்., 20 ஆகிய தேதிகளில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்ட புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு, செப்., மாதம், ஏரியை புனரமைக்க 1.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், புனரமைப்பு பணிகள் நடக்கவில்லை. ஒதுக்கப்பட்ட தொகை என்னவாயிற்று என தெரியவில்லை.

இதுபோன்ற மோசடிகள், முறைகேடுகளால், செங்கை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு நாம் வழங்கிடும் கொடை, இயற்கை வளங்கள் மட்டுமே. எனவே, மனித வாழ்வாதாரத்திற்கு ஆணி வேராக உள்ள நீர்நிலைகளை காப்பாற்ற, பாதுகாக்க, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இல்லையேல், செங்கை மாவட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் வறட்சி பூமியாக மாறிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement