350க்கும் மேற்பட்ட பூர்வீக விதைகளை பாதுகாக்கும் பெண்
- நமது நிருபர் -: தன் வீட்டு மாட்டு கொட்டகையில் 350க்கும் மேற்பட்ட பூர்வீக விதைகளை பாதுகாக்கும் மையமாக மாற்றி உள்ளார், தார்வாடை சேர்ந்த பெண் விவசாயி.
கொரோனாவுக்கு பின், ஆடைத் தொழிலில் ஈடுபட்டிருந்த பல பெண்கள் வேலையை இழந்தனர். அவர்களின் எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருந்தனர். இத்தகையோருக்கு உதவுவதற்காக 'சஹஜ சம்ரித்தி' என்ற அமைப்பு முன் வந்தது. பெண்களின் திறமையை கண்டறிந்து, தங்கள் சொந்த முயற்சியால் பொருளாதார தன்னிறைவு அடைய வேண்டும் என்று முடிவு செய்தது.
பயிற்சி அதற்காக தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவின் தீர்த்தா கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது. இக்கிராமத்தினர் மக்காச்சோளம், பருத்தி எனும் ஒற்றை சாகுபடி முறையை மட்டுமே நம்பியிருந்தனர்.
முன்னோர்கள் பயிரிட்ட பூர்வீக விதைகளை மறந்து விட்டனர்.எனவே பெண்களுக்கு இயற்கை விவசாயம், கலப்பு விவசாயம், காய்கறி வளர்ப்பு, தானிய பயிர்களை மீட்டெடுப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பீபி ஜான் ஹலேமானி பங்கேற்றார். அதன் பின், 'பீபி பாத்திமா மகளிர் சங்கம்' ஒன்றை உருவாக்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நாங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்த போது, அந்த சாதனையை எட்டிப்பிடிப்பது அவ்வளவு சுலபமாக அமையவில்லை. முதலில் விவசாயிகளிடம் சென்று பயிற்சி அளிக்கிறோம் என்று கூறிய போது, எங்களை பார்த்து சிரித்தனர்; ஏளனம் செய்தனர். சில சமயம் பெண்களே எங்களுக்கு தடையாக இருந்தனர்.
ஆனாலும் எங்கள் முயற்சியை கைவிடவில்லை. வீடு வீடாக சென்று, வீட்டு தோட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
முன்னேற்றம் காய்கறி சாகுபடி குறித்து செய்முறை பயிற்சி வழங்கி, படிப்படியாக அவர்களின் நம்பிக்கையை பெற்றோம்.
ஒரு காலத்தில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்த அவர்கள், இன்று தங்கள் கிராமங்களை விட்டு வெளியூர்களுக்கு செல்லும் அளவுக்கு முன்னேறி உள்ளனர்.
நானும் இப்போது டில்லி வரை தனியாக விமானத்தில் சென்று வந்துள்ளேன்.
எங்கள் சங்கத்தின் முக்கிய சாதனைகளில் விதை வங்கியாகும். எங்கள் வீட்டின் மாட்டு கொட்டகையில் 350க்கும் மேற்பட்ட பூர்வீக விதைகளை பாதுகாத்து வருகிறோம். சேகரிப்புக்காக மட்டுமல்ல, பாதுகாக்கவும், மற்றவர்களுக்கு வழங்கவும் வைத்துள்ளேன்.
விவசாயிகள் கேட்கும் விதைகள் வழங்குவோம். அவர்களின் அறுவடைக்கு பின், இரண்டு மடங்காக விதைகளை எங்களுக்கு வழங்குவர்.
நாங்கள் விவசாய உற்பத்தியோடு மட்டுமின்றி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரித்து வருகிறோம். ராகி, பக்வீட் மற்றும் தானியங்களில் இருந்து நுாடுல்ஸ், ரொட்டிகள், புரோட்டீன் ஷேக்குகள், பலதானிய மாவு, ராகி மால்ட் என 30க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றுக்கு சந்தையில் தேவை அதிகம் உள்ளது.
வேளாண் கண்காட்சி நடக்கும் இடங்களுக்கு சென்று, வட மாவட்டங்களின் பாரம்பரிய உணவுகளை தயாரித்து மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
எங்களின் பணியை பாராட்டி, 2025 ல் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தால் வழங்கப்படும், 'ஈக்வேட்டர் இனிஷியேடிவ்' விருதை எங்கள் அமைப்புக்கு வழங்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு
-
பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
-
வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
-
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
-
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா
-
சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்