மீன் பிடிக்க வழியின்றி மீனவர்கள் வாழ்வாதாரம்.. கேள்விக்குறி ! மணல் திட்டுகளால் பாழாகும் பழவேற்காடு ஏரி
பழவேற்காடு, மார்ச் 22- பழவேற்காடு மீனவப்பகுதியில் 56 மீனவ கிராமங்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள உவர் நீர் ஏரி வறண்டு மண் திட்டுக்களாக மாறியதால், படகுகளை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தவிர மீன்வளமும் குறைந்து, வாழ்வாதாரம் பாதித்து வருவதால், ஏரியை துார்வாரி சீரமைக்க எதிர்பார்த்து, மீனவர்கள் காத்திருக்கின்றனர். தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லை, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உவர் நீர் ஏரி உள்ளது. 60 கி.மீ., நீளம், 17.5 கி.மீ., அகலம் பரந்து விரிந்துள்ளது.
ஆரம்பாக்கத்தில் துவங்கி, பழவேற்காடு வரை, 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 20,000 மீனவர்களின் முக்கிய மீன்பிடி தொழிலுக்கான வாழ்வாதார மையமாக திகழ்கிறது.
அங்குள்ள மீனவ பெண்கள், மீன், இறால், நண்டு உள்ளிட்டவற்றை பிடித்தும், அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஏரி மற்றும் கடலில் மீன்பிடிக்க, 2,000க்கும் அதிகமான பைபர் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள இந்த ஏரி, ஆங்கிலேயர் காலத்திற்கு பின், இதுவரை துார்வாரப்படாமல் இருக்கிறது.
ஏரிக்கு, ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணி ஆகிய ஆறுகள் மற்றும் பகிம்ஹாம் கால்வாய் வாயிலாக, ஆண்டுதோறும் பருவ மழையின்போது, 20 - 25 டி.எம்.சி., தண்ணீர் வந்தடைகிறது.
ஏரி துார்வாரப்படாததால், ஆங்காங்கே மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. இதனால் ஏரிக்கு வரும் மழைநீர் தேங்காமல், முகத்துவாரம் வழியாக கடலுக்குள் சென்றுவிடுகிறது.
தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளிலும் ஏரியின் ஆழம், 15 மீட்டரில் இருந்து 3 மீட்டராக குறைந்துள்ளது. மணல் திட்டுகளால் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் பரிதவிக்கின்றனர்.
மேலும், மீன்களின் இனப்பெருக்கமும் குறைந்து, ஏரியை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
பெரிய உவர் நீர் ஏரி ஒடிஷா மாநிலத்தில் உள்ள 'சில்கா' ஏரிக்கு அடுத்து, நாட்டின் இரண்டாவது பெரிய உவர் நீர் ஏரியாக பழவேற்காடு இருக்கிறது.
அங்கு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் ஏரியை துார்வாரி பராமரிப்பதாகவும், தமிழக அரசு அதற்காக எந்தவொரு முன்னெடுப்பும் மேற்கொள்ளவில்லை எனவும், மீனவர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மீன்வளத் துறை மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழவேற்காடு ஏரியை துார்வாருவது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். உரிய அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெற்று, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மீன் இறங்குதளம் பகுதிக்கு படகுகள் வந்து செல்வதில் சிரமம் உள்ளதால், அப்பகுதியில், 250 மீட்டர் சுற்றளவிற்கு, துார்வார திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
மணல் திட்டுகளால் தவிப்பு மணல் திட்டுகளில் படகுகளை இயக்கும்போது, அவை அதிகளவில் தேய்மானம் அடைகின்றன. இன்ஜின்கள் அடிக்கடி பழுதாகின்றன. அவற்றை பராமரிக்க கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது. மேலும், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்து வருவதால் மீன்வளமும் பாதிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் டிரஜ்ஜர் இயந்திரங்களை பயன்படுத்தி ஏரி துார்வாரப்பட்டது. அதுபோன்று ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். - பி.எத்திராஜ் தலைவர், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம், பழவேற்காடு
பறவை வாழ்விடம் குறைகிறது பழவேற்காடு உவர் நீர் ஏரியானது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதுடன், பறவைகளின் சரணாலயமாகவும் இருக்கிறது. ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் இரை தேடுகின்றன. துார்வாரப்படாததால், ஏரியின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பறவைகளின் வாழ்விடங்களும் குறைகின்றன. சட்டசபை தேர்தல் வரும் நிலையில், ஆண்ட, ஆளும் அரசியல் கட்சியினரிடம் ஏரியை துார்வாரி சீரமைப்பது தொடர்பாக நிச்சயம் கேட்போம். - ஆ.முருகன் மீனவர், இடமணிகுப்பம், பழவேற்காடு.
மேலும்
-
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக்கொலை; இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு
-
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
-
நுாற்பாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி
-
சாலை அமைத்து தரக்கோரி தம்பதி திடீர் சாலை மறியல்
-
மனைவி மரணத்தில் சந்தேகம்: 2வது கணவரிடம் விசாரணை
-
'போக்சோ' குற்றங்கள்