அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு

7

நமது நிருபர்



''அமெரிக்காவின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார்'' என கியூபா அதிபர் மிகெல் டியாஸ் கானெல் தெரிவித்து உள்ளார்.



வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை அமெரிக்க தடை செய்துள்ளது. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியுடன், மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாட்டு கியூபாவில் நிலவுகிறது. கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டுமானாலும், அதிபர் மிகெல் டியாஸ் கானெலைப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

'கியூபா ஒரு மிகப்பெரிய பேரழிவில் உள்ளது. அங்குள்ள மக்கள் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். வெனிசுலாவில் நாம் மேற்கொண்ட நடவடிக்கையால், அந்நாடு தற்போது சிறப்பாக உள்ளது. அதேபோன்று, கியூபாவையும் நாம் மிக எளிதாக விடுவிக்க அல்லது நம் வசப்படுத்த முடியும்' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.



முன்பு, வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை நீக்கிவிட்டு சாதகமான ஒரு ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது போல, அடுத்து அமெரிக்காவின் குறி கியூபாவாக மாறியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் கியூபா அதிபர் மிகெல் டியாஸ் கானெல் கூறியதாவது: நாங்கள் கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கப் போவது இல்லை.


அமெரிக்காவின் எந்தொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார். கியூபாவை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ முயன்றால் கடுமையான பதிலடி தரப்படும். இவ்வாறு மிகெல் டியாஸ் கானெல் கூறினார். இது குறித்து கியூபா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ கூறியதாவது:


கியூபாவின் அரசியல் அமைப்புமுறை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல, நிச்சயமாக கியூபாவின் அதிபரையோ அல்லது எந்தவொரு அதிகாரியின் பதவியோ அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்பதை என்னால் திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியும்," என்றார்.

Advertisement