கழிவு மீன் நிறுவனங்களை மூட கோரி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

துாத்துக்குடி : லோக்சபா தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வரும் சட்டசபை தேர்தலையும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொட்டலுாரணி கிராமத்தில் மூன்று கழிவு மீன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கழிவு மீன்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் அந்த நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மூன்று நிறுவனங்களில் இருந்தும் வெளியேறும் நச்சுப்புகையினால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆறு ஆண்டுகளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

ஆலைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி, 2024 லோக்சபா தேர்தலை புறக்கணித்தனர்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொட்டலூரணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மூன்று கழிவு மீன் நிறுவனங்களையும் நிரந்தரமாக மூட வேண்டும், மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்பன உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக, ஊர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை தேர்தல் அலுவலர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம் என கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

Advertisement