எதிர்க்கட்சியினர் வெளிநடப்புக்கு மத்தியில் ஓட்டு சீட்டு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்

பெங்களூரு: எதிர்க்கட்சியினர் வெளிநடப்புக்கு மத்தியில், உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டு சீட்டு பயன்படுத்தும் மசோதா, சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

50 லட்சம் ஓட்டுகள் உள்ளாட்சி தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, ஓட்டு சீட்டை பயன்படுத்த அனுமதிக்கும் கிராம சுயராஜ்யம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் திருத்த மசோதாவை, கிராம வளர்ச்சி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.

அவர் பேசியதாவது:

தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீதான நம்பிக்கை மக்களிடம் குறைந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடந்த போது, ஐந்து மணி நேரத்தில், 50 லட்சம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இது எப்படி சாத்தியம். ஹரியானா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் இதே தான் நடந்தது.

தேர்தலில் நடக்கும் முறைகேடு பற்றி, தேர்தல் ஆணையம் முறையாக பதில் அளிப்பது இல்லை. தேர்தலை நேர்மையாக நடத்த, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டை பயன்படுத்த மசோதா கொண்டு வந்து உள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அவர்கள் தான் மின்னணு ஓட்டு பதிவு முறையை கொண்டு வந்தனர். இப்போது அவர்களே வேண்டாம் என்கின்றனர். மின்னணு ஓட்டு பதிவு முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றமே கூறி உள்ளது.

கர்நாடகாவில், 2023 ல் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 135 இடங்களில் வெற்றி பெற்ற போதும், தெலுங்கானாவில் வென்ற போதும், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம் மீது ஏன் சந்தேகம் கொள்ளவில்லை. உங்கள் தோல்விக்கான காரணத்தை, இயந்திரம் மீது பழியாக போடாதீர்கள். மீண்டும் கற்காலத்திற்கே செல்லும் முயற்சிகளை செய்யாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மசோதா மீது பேசிய பா.ஜ., உறுப்பினர்கள் சுனில் குமார், சுரேஷ் குமார், அஸ்வத் நாராயண் உள்ளிட்டோர், ஓட்டு சீட்டை மீண்டும் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக், மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார்.

எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதற்கு மத்தியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisement