கால்நடை டாக்டர் இறப்பு காரணமானவர்கள் யார்?

ஷிவமொக்கா: ''வனவிலங்கு சரணாலயத்தில் கால்நடை மருத்துவர், நீர்யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்,'' என மாநில உயிரியல் பூங்கா ஆணைய தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.

ஷிவமொக்கா மாவட்டம் தாவரகொப்பாவில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில் கால்நடை மருத்துவர் சமீக் ஷா ரெட்டி மரணத்துக்கு பின், மாநில உயிரியல் பூங்கா ஆணைய தலைவர் ரங்கசாமி வந்தார்.

அவர் கூறியதாவது:

அந்த நேரத்தில் அங்கு சமீக் ஷா ரெட்டி எதற்காக தனியாக சென்றார். விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவர்கள் வருவதில் பிரச்னை இல்லை.

விலங்குகள் மீதுள்ள அதீத அன்பே அவரின் மரணத்துக்கு வழிவகுத்து உள்ளது. கால்நடை மருத்துவரை தாக்கிய நீர் யானை ஈன்ற குட்டி இறந்துவிட்டது. தற்போது கர்ப்பமாக இருக்கும் நீர்யானையை பரிசோதிக்க அவர் வந்தாரா என்று தெரியவில்லை.

நீர் யானையை பரிசோதிக்க அதன் வளாகத்துக்குள் ஏணி மூலம் கீழே இறங்கினார். அவருடன் ஊழியர்களும் இருந்தனர். இதை பார்த்த நீர்யானை, அவர்களின் அருகில் வந்தது.

இதை பார்த்த ஊழியர்கள் முதலில் ஏணியில் ஏறினர். டாக்டர் ஏணியில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். அப்போது நீர்யானை அவரை தாக்கி உள்ளது.

கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். விசாரணையில் உண்மை தெரியவரும். அவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement