நாடு வளர்ச்சியடைய நீதித்துறை வளர வேண்டும் வி.ஐ.டி., பல்கலை கருத்தரங்கில் கவர்னர் பேச்சு

செங்கல்பட்டு: ''நாடு வளர்ச்சியடைய நீதித்துறை வளர வேண்டும்,'' என, சென்னை வி.ஐ.டி., பல்கலையில் நடந்த கருத்தரங்கில் தமிழக கவர்னர்-பொறுப்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசினார்.

சென்னை கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி., சென்னை பல்கலையில், தமிழ்நாடு சட்டக்கல்லுாரி மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து 'நீதிக்களம்' என்ற தேசிய அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கை நடத்தியது.

'வளர்ச்சியடைந்த இந்தியாவில் சட்டத்துறையின் பங்களிப்பு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தமிழகம் முழுதும் இருந்து 700 க்கும் மேற்பட்ட சட்டக்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

நேற்று நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில், வி.ஐ.டி., நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். வி.ஐ.டி., துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் -பொறுப்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், கவுரவ விருந்தினரான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் கவர்னர் பேசியதாவது:

இந்தியாவில், 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், நம் நா ட்டில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதி களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தான் .

குறைவான மக்களே நீதி துறையை அணுகி நீதியை பெற கூடிய நிலை நீடித்து வருகிறது.

இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நீதித்துறையும் வளர வேண்டும். மாணவர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டு எளிய மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

நீதிபதி பேசும்போது, 'நாடு வளர்ச்சி அடைய மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்' என்றார்.

வி.ஐ.டி., நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசியதாவது:

மாண வர்கள் இந்தியாவின் எதிர்காலமாக திகழ்கின்றனர். இந்தியாவில் 5.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 2 லட்சம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேக்க நிலையில் உள்ளன.

நீதித்துறையை ஏழைகள் அணுகக்கூடிய சூழல் இல்லை. வசதிப்படைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய நிலை உள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இளைஞர்களுக்கு சிறந்த உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கருத்தரங்கில் சிறந்த ஆய்வு கட்டுரை களை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கருத்தரங்கின் துவக்க விழாவில், பார்லி., விவகார மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார்.

Advertisement