போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்

4


வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரை நடத்துவதற்கு போதுமான நிதி இருப்பதால், கூடுதல் வரி ஏதும் விதிக்கப்படாது என்று அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 24 நாட்களாக நீடித்து வருகிறது. இந்தப் போருக்காக அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. தற்போது, இந்தப் போர் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால், அமெரிக்க பார்லிமென்டில் கூடுதல் நிதியை அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் கோர உள்ளது. ஏற்கனவே, பல ஆயிரம் கோடி செலவிடப்பட்ட நிலையில், கூடுதல் நிதி ஒதுக்க எதிர்க்கட்சி மட்டுமின்றி ஆளுங்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஈரான் போருக்கான நிதியுதவி குறித்து அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்கர்களுக்கு ஒரு உறுதியளித்துள்ளார். அதாவது, போர் செலவுகளுக்காகப் பொதுமக்கள் மீது கூடுதல் வரிச் சுமைகளைச் சுமத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை, எனக் கூறியுள்ளார்.

அதேபோல, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், "தற்போதைய மற்றும் எதிர்கால ராணுவச் செயல்பாடுகளுக்கு கூடுதல் நிதி என்பது மிகவும் அவசியம். போரின் தீவிரத்தைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும்," என்றார். அதிபர் டிரம்பின் அரசு நிர்வாகத்தினரின் இந்தப் பேச்சின் மூலம், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவது சந்தேகமாகியுள்ளது.

Advertisement