தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் தி.மு.க., காங்., -- நாம் தமிழர் மோதல்: தொகுப்பாளர், செய்தியாளர் மண்டை உடைந்தது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த தனியார் செய்தி டிவி விவாத நிகழ்ச்சியில் தி.மு.க., காங்., - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜேஷ், செய்தியாளர் சதாம் உசேன் மண்டை உடைந்தது.

காரைக்குடி மகர் நோன்பு திடலில் தனியார் செய்தி டிவி நிறுவனம் சார்பில் 'தேர்தல் பயணம்' விவாத நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் தி.மு.க., சார்பில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். திருப்புத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் அ.தி.மு.க.,வின் சாதனைகளை விளக்கி பேசினார். நாம் தமிழர் சார்பில் அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசினார்.

காரைக்குடியில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக பேசிய இடும்பாவனம் கார்த்தி, காங்., எம்.எல்.ஏ,, மாங்குடி, தி.மு.க., குறித்து விமர்சித்தார்.

தி.மு.க., காங்., தொண்டர்கள் கூச்சலிட்டனர். தகராறு செய்து சேர், கற்களை மேடை நோக்கி எறிந்தனர். இதனால் தி.மு.க., காங்., - நா.த., கட்சியினரிடையே அடிதடி ஏற்பட்டது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜேஷ், செய்தியாளர் சதாம் உசேன் ஆகியோரது மண்டை உடைந்தது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நா.த., கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

Advertisement