திருப்புவனம் மெயின்ரோட்டில் சந்தையால் நெரிசல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவிப்பு
திருப்புவனம்: திருப்புவனத்தில் சந்தைக்கான போதிய இடவசதி இருந்தும் ரோட்டிலேயே வியாபாரிகள் கடைகள் வைத்து செவ்வாய் தோறும் நடத்துவதால், வாகன ஓட்டிகள் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று காலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை கால்நடை, காய்கறி சந்தை நடைபெறும். மதுரையில் இருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கீரை வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திருப்புவனத்தில் சந்தை நாளன்று விற்பனை செய்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளியில் தொடங்கி மணி மந்திர விநாயகர் கோயில் வரை சாலையை ஆக்கிரமித்து இரு புறமும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரை கடைகள் தவிர சரக்கு வேன், ஆட்டோ, தள்ளுவண்டி, டிரை சைக்கிள்களில் ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் 20 மீட்டர் அகலம் கொண்ட சாலை 5 மீட்டராக சுருங்கி பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லவே முடியவில்லை. செவ்வாய் கிழமை மட்டும் டூவீலர்கள் செல்வதற்கு கூட பாதை இல்லை. இரண்டு கி.மீ., தூரம் உள்ள நகர்ப்பகுதியை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேலாவதால், பஸ்கள் அனைத்தும் பைபாஸ் ரோட்டில் சென்று விடுகின்றன. சேதுபதிநகர் எதிரே வாரச்சந்தை நடத்த போதிய இடவசதி இருந்தும் வியாபாரிகள் வேண்டுமென்றே ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பேரூராட்சி , வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொண்டு சாலையோர கடைகளை அகற்ற மறுக்கின்றனர். ரோட்டோர கடைகளில் பேரூராட்சி வரி வசூல் செய்ய கூடாது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியும் அதனையும் மீறி கட்டணம் வசூலிப்பதால் வியாபாரிகள் மொத்தமாக சேர்ந்து கொண்டு ரசீதை காட்டி போலீசாரையே மிரட்டுகின்றனர். இதனால் யாரும் கண்டு கொள்வது கிடையாது. உயிர் பலி ஏற்படும் முன் வாரம் தோறும் ரோட்டில் கடைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
////
மேலும்
-
ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்
-
பெங்களூரு, யாத்கிரில் பண்ணை குட்டையில் மூழ்கி 6 பேர் பலி
-
350க்கும் மேற்பட்ட பூர்வீக விதைகளை பாதுகாக்கும் பெண்
-
தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆஷா
-
முதுகலை பட்டப்படிப்பில் தங்க பதக்கம் வென்ற சந்தியா
-
ஏழைகளுக்கு அரசு திட்டம் கிடைக்க உதவும் கவுசியா