விவசாயிகள் ஓட்டு யாருக்கு?
பல்லடம்:சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கொங்கு மண்டல விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு அளிப்பது என தீர்மானித்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாய சங்கங்கள் கொள்கை ரீதியாக பிரிந்திருந்தாலும், தங்கள் கோரிக்கைகளால் ஒன்றுபட்டே உள்ளனர் என்று கூறலாம்.
விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் போது, ஒவ்வொரு விவசாய சங்கத்தினரும் தங்களுக்கே உரித்தான பாணியில் போராடுகின்றன.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிப்பது, ஆனைமலையாறு- நல்லாறு திட்டம், கள்ளுக்கான தடை நீக்கம், இனாம் நிலப் பிரச்னை, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கரும்பு, நெல்லுக்கு உரிய விலை வழங்காதது, பாலுக்கான கொள்முதல் விலை என, விவசாயிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றாதது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சில சங்கங்கள் இதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றன. இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கான களப்பணியில் இந்த சங்கங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேசமயம் விவசாயிகளின் ஓட்டுக்கள் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.