சந்தேகம் இருந்தால் தேர்தல் அலுவலரை அணுகுங்கள்: கலெக்டர் அறிவுரை
காஞ்சிபுரம்:'எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரை அணுகுங்கள்' என, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுதும், ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம், ஆலந்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி நடந்தது. அதன்படி, ஆலந்துார் தொகுதிக்கு புனித தோமையர் மலையில் இருக்கும், மான்போர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி; ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு, பென்னலுார் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி; உத்திரமேரூர் தொகுதிக்கு ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி; காஞ்சிபுரம் தொகுதிக்கு எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்த பயிற்சி முகாமை கலெக்டர் சினேகா ஆய்வு செய்தார். அப்போது, எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரை அணுகுங்கள் என, அறிவுரை வழங்கினார்.