வீட்டில் பதுக்கி ரூ.1.20 கோடி பறிமுதல்

முகப்பேர்: வீட்டிற்குள் பதுங்கிய 1.20 கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

முகப்பேர், கோல்டன் காலனி பகுதியில், கொரட்டூர் போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோல்டன் காலனி 3வது தெருவில் உள்ள வீட்டினில் இருந்து வந்த நபர், போலீசை கண்டதும் கையில் வைத்திருந்த பையை வீட்டின் சுற்றுச்சுவருக்குள் வீசி ஓடினார். போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது, 20 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்தது. வீட்டிற்குள் பதுங்கிய வடமாநில நபரை பிடித்து, சோதனையிட்டதில் ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த, 1 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் வேளாண் துறை அதிகாரி அமுதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்தனர்.

அதில், கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுநாதா என்பவர் நடத்தி வரும் ஏஜன்சியில் செலுத்துவதற்காக, மதுரவாயலில் உள்ள, 37 'டாஸ்மாக்' கடைகளில் இருந்து பெறப்பட்ட பணம் என்பது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், 1.20 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் வியாபாரியிடம்

ரூ.60,000 பறிமுதல்

கொடுங்கையூர், மார்ச் 30-

கொடுங்கையூர், டி.எச்.ரோடு பகுதியில், தேர்தல் அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த பைக்கில் வந்த நபரின் உடைமைகளை சோதனை செய்த போது, 63.700 ரூபாய் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கொருக்குப்பேட்டயை சேர்ந்த பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் சைலேஷ்குமார், 40 என்பதும், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.





காங்., பிரமுகரிடம்

270 வாட்ச் பறிமுதல்

படப்பை அடுத்த வைப்பூர் ஊராட்சி கூழங்கல்சேரியைச் சேர்ந்தவர் நடராஜன்; காஞ்சிபுரம் மாவட்ட காங்., செயலர். இவரது மனைவி சசிகலா, வைப்பூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்; உடல்நலக்குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், பங்கேற்க வரும் மக்களுக்கு நினைவு பரிசாக, 270 கடிகாரங்களை வழங்க நடராஜன் வாங்கி வைத்திருந்தார். தகவலறிந்து கூழங்கல்சேரிக்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர், நடராஜனிடம் இருந்த 270 கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement