மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை

தின்சுகியா: “அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்கும்,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்., 9ல் தேர்தல் நடக்கவிருக்கிறது. இங்கு, ஆளும் பா.ஜ., அரசை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் நேற்று பிரசாரம் செய்தார். மர்கேரியா தொகுதி வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ., வுமான பாஸ்கர் சர்மாவை ஆதரித்து அவர் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

அசாமில், 2016க்கு முந்தைய காலம் இருண்ட காலம். அப்போது, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஓட்டு வங்கியை மையமாக வைத்து அரசியல் செய்தது. வளர்ச்சிப் பணிகள் முடக்கப்பட்டு, மக்கள் வன்முறை மற்றும் போராட்டங்கள் குறித்தே பேசி வந்தனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், ஒட்டுமொத்த அரசியல் சூழலே மாறியுள்ளது.

பல்வேறு வாய்ப்புகள் நிறைந்த மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது. இங்கு, ஒவ்வொரு உரிமையும், அசாம் மற்றும் நம் நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது. சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு இடமில்லை. இந்த தேர்தலில், பா.ஜ., மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement