கார் - லாரி மோதல்: தம்பதி படுகாயம்

திருத்தணி: திருத்தணி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், கணவன் - மனைவி படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மகள் காயமின்றி உயிர்தப்பினார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் சேதுராமன், 47. இவர், நேற்று அதிகாலை மனைவி உமாமகேஸ்வரி, 40, மகள் மகேஸ்வரி, 15, ஆகியோருடன், திருப்பதியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை சேதுராமன் ஓட்டினார்.

நேற்று காலை 6:30 மணியளவில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, முன்னால் சென்ற ஈச்சர் லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டார்.

இதனால், கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழுந்து, லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சேதுராமன், உமா மகேஸ்வரி படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மகள் மகேஸ்வரி காயமின்றி உயிர் தப்பினார்.

அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement