இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு

நமது நிருபர்




ஆந்திர தலைநகர் அமராவதி என்று அம்மாநில அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புக்காக ஜனாதிபதிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு சபைகளிலும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா, 2026-ன் மூலம் அந்த மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.



தற்போது ஆந்திர தலைநகர் அமராவதி என்று அம்மாநில அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது: ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, நமது தலைநகரம் குறித்த நீண்ட நாள் கனவை நனவாக்கிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


நமது மாநிலத்தின் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் வழங்கிய வழிகாட்டுதல்களுக்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும்; இச்சட்ட மசோதாவிற்கு ஆதரவளித்த அனைத்து பார்லி எம்பிக்களுக்கும், நமது மாநிலத் தலைவர்களுக்கும், எங்களோடு உறுதுணையாக நின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது ஆந்திரப் பிரதேச மக்களாகிய என் மக்களுக்கும், குறிப்பாக அமராவதியைச் சேர்ந்த எனது விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Advertisement