வர்ணம் பூசாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி

திருவாலங்காடு: நாராயணபுரம் கூட்டுச்சாலையில், வர்ணம் பூசாத வேகத்தடைகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.

திருவள்ளூர் --- அரக்கோணம் நெடுஞ்சாலையில், நாராயணபுரம் கூட்டுரோடு துவங்கி, திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பு வரை, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பள்ளி, அரசு அலுவலகங்கள் மற்றும் வளைவு பகுதிகளில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி, 11க்கும் மேற்பட்ட வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு, மஞ்சாகுப்பம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளன. வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement