தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:காவிதண்டலம், ஒரக்காட்டுப்பேட்டை உள்ளிட்ட கிராம சாலைகளில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் அப்பகுதி மக்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், விச்சூர் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதியோடு சில நாட்களாக மண் குவாரி இயங்குகிறது.

ஏரியில் குத்தகை விடப்பட்ட மண்ணை செங்கல் சூளை மற்றும் சாலை பணி போன்ற பயன்பாட்டுக்கு லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது.

இதில்,ஏராளமான லாரிகள் காவிதண்டலம், ஒரக்காட்டுப்பேட்டை கிராம சாலையை கடந்து செங்கல்பட்டு பிரதான சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

இதில் பல லாரிகள் தார்ப்பாய் மூடாமலும், அதிக அளவு பாரம் ஏற்றியும் இயங்குகின்றன. இதனால்,சாலைகளில் மண் புழுதி பரவி வாகன ஒட்டிகள் கண்களை பதம் பார்க்கின்றன.

மேலும், மண் கட்டிகள் சாலைகளில் கொட்டி நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.

எனவே, விச்சூர் ஏரியில் மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில், அளவாக மண் ஏற்றுவதோடு முறையாக தார்ப்பாய் மூடாமல் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement