தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா: அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்

இளையான்குடி:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு பங்குனி விழா மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். மார்ச் 29 அன்று இரவு 10:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது.

தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக பங்குனி பொங்கல் விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பக்தர்கள் கோயிலில் குவிய தொடங்கினர். பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடி பொங்ல் வைத்தும், அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, பால்குடங்கள் எடுத்து நேர்த்தி செலுத்தினர். கோயில் வளாகத்தில் கோழி, ஆடுகளை பலியிட்டனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டன. மாவட்ட அளவில் பெரும்பாலான கிராமங்களில் பக்தர்கள் அவரவர் வீட்டின் முன் தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று இரவு 7:00 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்தில் அம்மனின் தேர் பவனி நடைபெறும்.

////





Advertisement