பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது சென்னை: தொடர்ந்து மூன்றாவது தோல்வி

பெங்களூரு: சென்னை அணி சரியான பாதை தெரியாமல் தவிக்கிறது. பேட்டிங், பவுலிங் மீண்டும் எடுபடாத நிலையில், பெங்களூரு அணியிடம் 43 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

படிக்கல் அபாரம்: பெங்களூரு அணிக்கு பில் சால்ட் (46), விராத் கோலி (28) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. நுார் அகமது வீசிய 12வது ஓவரில் கேப்டன் ரஜத் படிதார், படிக்கல் தலா ஒரு சிக்சர் விளாச, பெங்களூரு அணி 100 ரன்னை கடந்தது. தொடர்ந்து அசத்திய படிக்கல், ஷிவம் துபே வீசிய 13வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டினார். இந்த ஓவரில் படிதார், ஒரு சிக்சர் விளாச 23 ரன் கிடைத்தது. ஹென்றி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய படிக்கல், 28 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது ஓவர்டன் 'வேகத்தில்' படிக்கல் (50 ரன், 2X6, 5X4) போல்டானார்.
டேவிட் கலக்கல்: கலீல் வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் படிதார். நுார் அகமது, ஜேமி ஓவர்டன் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்ட டிம் டேவிட், 22 பந்தில் அரைசதம் கடந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்தது. படிதார் (48), டேவிட் (70 ரன், 25 பந்து, 8X6, 3X4) அவுட்டாகாமல் இருந்தனர்.


சர்பராஸ் அரைசதம்: கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் (7), ஆயுஷ் மாத்ரே (1), சஞ்சு சாம்சன் (9) ஏமாற்றினர். புவனேஷ்வர் குமார் வீசிய 4வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய சர்பராஸ் கான், ஜேக்கப் டபி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். அபினந்தன் சிங் வீசிய 6வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த சர்பராஸ், 24 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த போது குர்ணால் பாண்ட்யா 'சுழலில்' சர்பராஸ் (50) சிக்கினார். கார்த்திக் சர்மா (6), ஷிவம் துபே (18) நிலைக்கவில்லை. பின் இணைந்த பிரஷாந்த் வீர் (43), ஜேமி ஓவர்டன் (37) ஜோடி ஆறுதல் தந்தது. நுார் அகமது (8), மாட் ஹென்றி (2) ஏமாற்றினனர்.
சென்னை அணி 19.4 ஓவரில், 207 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. கம்போஜ் (19) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் கைப்பற்றினார்.

முதலிரண்டு போட்டியில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளிடம் ஏமாற்றிய சென்னை அணி, தொடர்ந்து 3வது தோல்வியை சந்தித்தது.


இது அதிகம்

கிரிக்கெட் லீக் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை (250/3) பதிவு செய்தது பெங்களூரு. இதற்கு முன், குஜராத் அணி 231/3 ரன் (2024, ஆமதாபாத்) எடுத்திருந்தது.

* இது, சென்னைக்கு எதிராக பெங்களூரு அணியின் சிறந்த ஸ்கோர். இதற்கு முன், இரண்டு முறை (2023, 2024) தலா 218 ரன் எடுத்திருந்தது.

* தவிர இது (250/3), பெங்களூரு அணியின் 3வது அதிகபட்ச ஸ்கோர். ஏற்கனவே 263/5 (எதிர்: புனே, 2013), 262/7 (எதிர்: ஐதராபாத், 2024) ரன் குவித்திருந்தது.


200 விக்கெட்

கிரிக்கெட் லீக் அரங்கில், 200 விக்கெட் கைப்பற்றிய 2வது பவுலரானார் புவனேஷ்வர் குமார். இவர், 192 போட்டியில் 202 விக்கெட் சாய்த்துள்ளார். முதலிடத்தில் யுவேந்திர சகால் (224 விக்கெட், 176 போட்டி) உள்ளார்.

Advertisement