மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்

மேலுார்:மதுரை மாவட்டம் மேலுாரில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதனை, கட்சி தலைமை அறிவித்த நிலையில் வேட்பாளருக்கு எதிராக உள்ளூர் நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி கூட்டத்தில் இருந்து அவரை வெளியேற்றினர்.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி., விஸ்வநாதனை, மேலுார் காங்கிரஸ் வேட்பாளராக ஏப்ரல் 5 ஆம் தேதி கட்சி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுார் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் ‛கக்கன் பிறந்த பூமியில் காங்கிரஸ் கட்சியை அழிக்கலாமா, மேலுார் தொகுதியின் வெற்றி வாய்ப்பை இழக்கலாமா, கட்சியின் வளர்ச்சியை தடுக்கலாமா, மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லையா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கண்ணெதிரில் பறிபோகிறதே' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவர்கள், கட்சி நிர்வாகிகள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அங்கு வேட்பாளர் விஸ்வநாதன் ஆதரவு கேட்டு வரவே, நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ‛வேட்பாளரே வெளியே போ' என கோஷமிடவே அவர் வெளியேறினார்.

சிறிது நேரத்தில் விஸ்வநாதன் காங்., வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நிர்வாகிகள் கூறியதாவது : மேலுார் பகுதி நிர்வாகிகள் விருப்பமனு அளித்து இருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல், இத்தொகுதிக்கு தொடர்பே இல்லாத ஒருவரை தேர்வு செய்துள்ளனர் என்றனர்.

சிதம்பரம், மாணிக்கம்தாகூர் தங்கள் ஆதரவாளர்களை சிபாரிசு செய்திருந்தனர். இந்த குழப்பத்திற்கு தீர்வுகாண கட்சித்தலைவர் கார்கே சிபாரிசில், ராகுல் இவரை தேர்வு செய்துள்ளார் என்கின்றனர் கட்சியினர்.

விஸ்வநாதன் ஆதரவாளர்கள் கூறுகையில்,‛தெலங்கானாவில் கட்சிக்காக சிறப்பாக உழைத்ததால் இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலுார் தொகுதிக்கு மட்டும் தனியாக வேட்பாளரை அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement