வில்லிவாக்கத்தை முன்மாதிரி தொகுதியாக்கும் திட்டங்களை கொண்டுவருவதே என் இலக்கு: தேர்தல் பிரச்சாரத்தில் கார்த்திக் மோகன் வாக்குறுதி

சென்னை: ''வில்லிவாக்கத்தை, சென்னையின் முன்மாதிரி தொகுதியாக மாற்றும் திட்டங்களை கொண்டுவருவதே என் இலக்கு,'' என, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன் உறுதியளித்தார்.

தி.மு.க., சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியும், கார்த்திக் மோகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஐ.சி.எப்., லேபர் யூனியன், ஐ.சி.எப்., மஸ்துார் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார்.

தொழிற்சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, தனக்கு ஆதரவு கோரினார். பின், தொழிலாளர்களின் நலன் காக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் கொண்டுவரப்படும் என, உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, 98வது பகுதியில் உள்ள வி.பி., காலனி, தெற்கு தெருவில் பிரசாரத்தை துவக்கினார்.

அங்கிருந்து, திருவள்ளுவர் நகர், அண்ணா மெயின் தெரு, காமராஜ் நகர், மற்றும் மாதா கோவில் தெரு, கலைஞர் தெரு, சோலையம்மன் கோவில் தெரு, அயனாவரம் சாலை, வி.பி.காலனி விரிவு, உஜ்ஜினி தெரு புது நகர், போலீஸ் மாணிக்கம் தெரு, ஆதி ஆந்திரா தெரு வழியாக சென்று இரவு, பெத்தேல் பள்ளி அருகில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பிரச்சாரத்தின்போது, பகுதி செயலாளர்கள் கூ.பி.ஜெயின், தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பிரச்சாரத்தின்போது, கார்த்திக் மோகன் பேசியதாவது :

முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்கள், வில்லிவாக்கம் உட்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. அந்த திட்டங்களின் பலன், வில்லிவாக்கத்தில் மக்கள் அளிக்கும் ஆதரவால் தெளிவாக தெரிகிறது.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. வில்லிவாக்கம் மக்களுக்கு தரமான இலவச மருத்துவ சேவையும், தரமான கல்வி வாய்ப்புகளும் உறுதி செய்யப்படும்.

குறிப்பாக, இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விளையாட்டு வசதிகள் மற்றும் பயிற்சி மையங்களை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

வில்லிவாக்கத்தை சென்னையின் முன்மாதிரி தொகுதியாக மாற்றும் திட்டங்களை கொண்டு வருவதே என் இலக்கு. அடிப்படை வசதிகள் மட்டுமின்றி வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஆட்சியை தொடர மக்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகள், மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

****

Advertisement