ஜோசப் இருவர்; விஜய் இருவர்; பெரம்பூரில் நடிகர் விஜய்க்கு எதிராக போட்டி

10

நமது நிருபர்





பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மொத்தம் 14,700 வேட்பு மனுக்கள் தாக்கலாகி இருக்கின்றன. இன்று (ஏப்ரல் 07) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடந்து வருகிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் சொத்து வரி செலுத்தப்படவில்லை எனக் கூறி பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது பரிசீலனையில் இருக்கிறது. மாலைக்குள் வேட்புமனு ஏற்கப்படும் என தெரிகிறது. இந்த தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 66 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.


பொதுவாக விஐபி தொகுதி வேட்பு மனு தாக்கலில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும். அப்படி தான், விஜய் இறங்குவதால் தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.


பெரம்பூரை பொறுத்தவரை மொத்தம் 66 வேட்பு மனுக்கள் தாக்கலாகி இருக்கின்றன. தவெக தலைவர், ஜோசப் விஜய் என்ற பெயரில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து ஜோசப் என்ற பெயரில் 2 பேரும், விஜய் என்ற பெயரில் வேறு 2 பேரும் போட்டியிடுகின்றனர். அதாவது, விஜய் பெயரிலேயே அவரை எதிர்த்து 4 பேர் களம் இறங்கி உள்ளனர்.


அதாவது எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களை களம் இறங்கி உள்ளனர் என்று சொல்வதை விட களம் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.


பொதுவாக நட்சத்திர வேட்பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே கட்சிகள் நிறைய பேரை சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வைப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஓட்டு பெட்டியில் ஜோசப் விஜய், விஜய், ஜோசப் என பெயர்கள் மாறி மாறி வரும் போது, ஒரிஜினல் விஜய் யார் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

Advertisement