ஓட்டுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கல்; ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் 'ரெய்டு'

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். பல ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக சென்னை வந்த இவர், உணவகம், தனியார் தங்கும் விடுதிகள், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார்; தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார்.

கடந்த 2024ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு பொருட்கள் என கூறி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அதன் பின், அவரின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.

டில்லி திஹார் மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், ஜாமின் பெற்று வெளியில் உள்ளனர்.

இந்நிலையில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து, சென்னை அண்ணா சாலை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூரில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ஜே.எஸ்.எம்., தங்கும் விடுதி, எழும்பூர் எத்திராஜ் கல்லுாரி அருகே உள்ள ஜே.எஸ்.எம்., தங்கும் விடுதியின் தலைமை அலுவலகம், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

அதேபோல, சென்னை தி.நகரில் உள்ள ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீர் வீட்டிலும் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால், சோதனை நடத்த முடியாமல் திரும்பினர்.

இச்சோதனையின் போது, ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றுள்ளனர்.

Advertisement