'ஏழுமலையான் ஆசியால் கடல் தாமரை புத்தக பூங்கா உயர்ந்த நிலைக்கு செல்லும்'

பெங்களூரு: திருப்பதி ஏழுமலையான் ஆசியால், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் உயர்ந்த நிலைக்கு செல்லும் என, ஆன்மிகவாதி சந்திரசேகர் புகழாரம் சூட்டினார்.

பெங்களூரு சிவாஜி நகர் குயின்ஸ் சாலை தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, பன்னர்கட்டா சாலை கொட்டிகெரேயில் வசிக்கும் ஆன்மிகவாதி சந்திரசேகர் நேற்று வருகை தந்தார். திருப்பதி தொடர்பாக அவர் எழுதிய, 'நின்ற சீர் நெடுமால் பெருமை' என்ற புத்தகத்தை, நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

சிவ பக்தர் பின், அவர் கூறியதாவது:

ஆன்மிகம், இலக்கியம், முக்கிய பிரமுகர்கள் வரலாறு தொடர்பான புத்தகங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடிப்படையில் நான் சிவ பக்தர். கொரோனா நேரத்தில் திருப்பதிக்கு சென்ற போது, சீக்கிரமாக ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்து ஏழுமலையான் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

மாதந்தோறும் திருப்பதி சென்று ஒரு வாரம் தங்கி, கோவிலில் சேவை செய்கிறேன். திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு எங்கு, எப்படி செல்வது என்ற குழப்பம் உள்ளது. இதனை போக்க, 'நின்ற சீர் நெடுமால் பெருமை' என்ற புத்தகம் எழுதி உள்ளேன்.

பத்திரிகை அலுவலகத்தில் நுாலகம் ஆரம்பித்த உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். சென்னை கன்னிமாரா நுாலகம் போல, இந்த நுாலகமும் பெரிய அளவில் வளர வேண்டும். ஏழுமலையான் ஆசியால் கடல் தாமரை புத்தக பூங்கா உயர்ந்த நிலைக்கு செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனநிறைவு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, மதுரையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, பெங்களூரு தொட்டேனகுந்தியில் வசிக்கும் மகன் வீட்டிற்கு வந்து உள்ளார். அவரும் நேற்று கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு வந்தார்.அவர் கூறியதாவது:

மதுரையில் இருக்கும் போது, தினமும் அங்கு உள்ள நுாலகத்திற்கு சென்று தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களை படிப்பேன். வீட்டிற்கு வந்து புத்தகங்கள் வாசிப்பேன். பெங்களூரு வந்தாலும், தமிழ் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நுாலகத்தை தேடி கொண்டு இருந்தேன். இங்கு நுாலகம் ஆரம்பிக்கப்பட்டது பற்றி தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்று இங்கு வந்து அந்துமணி பதில்கள் புத்தகத்தை படித்தது, மறக்க முடியாத அனுபவம். 'டிவி' மொபைல் பார்த்து நேரத்தை வீணடிப்பதை விட, புத்தகங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தலாம். இனி பெங்களூரு வரும் போது எல்லாம் கண்டிப்பாக இங்கு வருவேன். நிறைய அருமையான புத்தகங்களின் தொகுப்பு உள்ளது. எதை படிப்பது, எதை விடுவது என்றே தெரியவில்லை. இங்கு வந்து தமிழ் பேசியது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. மனநிறைவுடன் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement