பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்க கோரிக்கை

புதுச்சேரி: அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஏற்கனவே அறிவித்த காலத்திற்கு முன்பாகவே, அறிவிக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகள் ஏப்ரல் 30ம் தேதி வரை இயங்கும் என அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் கடும் வெயிலின் காரணமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் கோடை விடுமுறையை முன்கூட்டியே தொடங்குவதாக அறிவித்து கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை அப்பொழுது நிலவும் வெப்ப அளவைப் பொறுத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement