'தேர்தல் செலவுக்காக சொத்துக்களை விற்றேன்'
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
பா.ஜ.,வுக்கு சென்னை மயிலாப்பூர் தொகுதி கிடைத்ததால், அங்கு போட்டியிடுகிறீர்களா அல்லது உங்களுக்காக கேட்டு பெறப்பட்டதா?
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தென் சென்னையில் போட்டியிட்டு, மூன்று லட்சம் ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தேன். எனவே, தென் சென்னைக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்பினேன். இங்குள்ள மயிலாப்பூர் தொகுதி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், அங்கு போட்டியிடும் விருப்பத்தை கட்சித் தலைமையிடம் தெரிவித்தேன். அதை ஏற்று, என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
எனக்கு மிகவும் பிடித்த இடம் மயிலாப்பூர். நான் செல்லும் கோவில்கள் இருப்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அங்குதான் இருப்பேன். கட்சிக்காக கிடைத்த மயிலாப்பூரில், நான் விரும்பி போட்டியிடுகிறேன். நான் வென்றால் தொன்மையும் நவீனமும் கொண்ட பக்தி மிகுந்த மயிலையை, சக்தி மிகுந்த மயிலையாக மாற்றுவேன்.
'இரு மாநில கவர்னராக இருந்தவர், சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். மற்றவர்களுக்கு வாய்ப்பை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்' என, உங்கள் கட்சியினர் விமர்சிக்கின்றனரே...
'மூன்று ஆண்டுகளாக வேலை செய்தேன். நான்கு ஆண்டுகளாக உழைத்தேன்; ஆனால், எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை' என, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அவர்களின் ஆதங்கம் புரிகிறது.
ஆனால், நான் 27 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். என் டாக்டர் பணியை துறந்து, தொடங்கிய மருத்துவமனைகளை மூடிவிட்டு, மக்கள் பணிதான் இனி வாழ்க்கை என மு டிவு செய்தே அரசியலுக்கு வந்தேன்.
கடந்த 2004, 2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தபோது, பலர் கட்சியை விட்டே விலகினர். பலர், கட்சி பணியிலிருந்து ஒதுங்கினர். நான் காங்கிரசுக்கு சென்று விடுவேன் என பலர் பேசினர்.
அப்போதும் கூட தளராமல், தீவிரமான கட்சிப் பணியில் இருந்தேன். அரசியலுக்கு வந்ததால், பெற்றதை விட இழந்ததே அதிகம். அதனால் தான் கட்சி தலைமை எனக்கு தேசிய செயலர், மாநில தலைவர், கவர்னர் போன்ற உயரிய பதவிகளை வழங்கியது. நான் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவில்லை. என் உழைப்பு, மக்கள் பணிக்கு கிடைத்த இடத்தை பெற்றிருக்கிறேன் என்பது தான் உண்மை.
கவர்னர் என்ற உயர் பதவியில் இருந்த உங்களுக்கு, ஏன் இந்த தேர்தல் ஆசை?
மக்களோடு மக்களாக இருந்து, அவர்களின் உணர்வுகளோடு ஒன்றி, பணியாற்றும் நேரடி மக்கள் பணியில் தான் எப்போதுமே எனக்கு ஆர்வம். நான்கரை ஆண்டுகள் இரு மாநில கவர்னராக இருந்ததால் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே, கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு திரும்பியிருக்கிறேன்.
இந்தியாவில் கவர்னர் பதவியின் முக்கியத்துவம், அதிகாரம் அனைவருக்கும் தெரியும். தனி விமானம், தனி ஹெலிகாப்டர், 300 காவலர்கள், 10 கான்வாய் வண்டிகள் என அதிகார உச்சத்தில் இருந்த நான், வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து மக்கள் பணியாற்ற வந்திருக்கிறேன். கவர்னர் பதவியையே துறந்த என்னை, பதவி ஆசையில் போட்டியிடுகிறார் என சிலர் கூறுவதை கேட்கும்போது மனம் வலிக்கிறது. ஆனாலும், நான் எதற்கும் தளர்ந்து போகிற பெண் கிடையாது.
கடந்த 2006 முதல், சளைக்காமல் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். ஒருமுறை கூட வெற்றி கிடைக்கவில்லையே ஏன்?
கடந்த 2006 முதல் ஆறு தேர்தல்களில் நான் போட்டியிட்டாலும், 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் மட்டுமே கூட்டணியில் போட்டியிட்டேன். மற்ற நான்கு முறையும் பா.ஜ., தனித்துப் போட்டியிட்டபோது, கட்சியை மக்களிடம் கொண்டு செல்லவே போட்டியிட்டேன். அப்போது, பணபலம், ஆள்பலம் கிடையாது. ஒரு தேர்தலில், செலவுக்காக என் சொத்துக்களை விற்றேன். வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல், துணிச்சலுடன் தேர்தலில் போட்டியிடுவதே ஓர் அரசியல்வாதியின் கடமை. ஏனெனில் மக்களின் அங்கீகாரத்தை பெற தேர்தல் தான் ஒரே வழி.
உங்கள் சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில், நான்கு தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. அங்கெல்லாம் போட்டியிடாமல், சென்னையில் போட்டியிடுவது ஏன்?
எனக்கு சென்னை புதிதல்ல. நான் வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது, அரசியல் பணி செய்தது அனைத்தும் சென்னையில் தான். சென்னையில் ஏற்கனவே நான்கு முறை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் எனக்கு உள்ளது. எனவே, சென்னையில் போட்டியிடவே விரும்பினேன். ஜாதி அடையாளம் இல்லாமல் அரசியல் செய்யவே நான் விரும்புகிறேன். பலரும் என்னை, நாகர்கோவில் அல்லது பத்மநாபபுரத்தில் போட்டியிட வலியுறுத்தினர். அதை நான் விரும்பவில்லை.
கடந்த 2024 தேர்தலில், பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற்ற தி.நகர், வேளச்சேரியை பெறாமல், தி.மு.க., கூட்டணியை விட, 4,500 ஓட்டுகள் குறைவாக பெற்ற மயிலாப்பூரை வாங்கியது ஏன்?
கூட்டணி என்றாலே பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பா.ஜ.,வுக்கு தி.நகர், வேளச்சேரி வேண்டும் என்று தான் கடைசி வரை வலியுறுத்தினோம். ஆனால், அத்தொகுதிகளில் அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் போட்டியிடுவதால், அவர்கள் விட்டுத் தரவில்லை. அதனால், வருத்தம் இருந்தாலும் பா.ஜ., ஏற்கனவே வென்ற மயிலாப்பூர் கிடைத்ததில் மகிழ்ச்சி தான்.
கடந்த 2021ல், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணியே வென்றது. அந்த கூட்டணியின் செல்வாக்கை உங்களால் உடைக்க முடியுமா?
கடந்த லோக்சபா தேர்தலில், இதே தென் சென்னையில்தான் பா.ஜ.,வுக்கு, மூன்று லட்சம் பேர் ஓட்டளித்தனர். இப்போது, அ.தி.மு.க.,வும் உள்ளது. எனவே, இந்த தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மயிலாப்பூர் மக்கள் விபரம் அறிந்தவர்கள்.
மக்கள் பணியில் ஈடுபாடுள்ள, எளிதில் அணுகக்கூடிய, தேசியம், தெய்வீகத்தில் பற்றுள்ள, பிரதமர் வரை சென்று மக்களுக்காக வாதிடும் வாய்ப்பு கொண்ட என்னை, மயிலாப்பூர் மக்கள் தவறவிட மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மயிலாப்பூரில், த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பிராமண ஓட்டுகளை பிரிப்பது, பா.ஜ.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
பிராமணர்கள் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். தேசியத்திற்கும் ஆன்மிகத்திற்கும் எதிரான யாருக்கும் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள். இது, த.வெ.க.,வுக்கும் தெரியும். நாம் தமிழர் கட்சிக்கும் தெரியும். எனவே, தேசியத்தின் ஓட்டுகளை யாரும் பிரிக்க முடியாது.
வாங்கிய தொகுதிகளில், நான்கில் தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என, உங்கள் கட்சியினரே சொல்கின்றனர்? எதனால் அந்த தொகுதிகள் வாங்கப்பட்டன? அவற்றை தேர்ந்தெடுத்தது யார்?
இது முற்றிலும் தவறானது. பா.ஜ.,வினர் யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். பா.ஜ., குறைந்தது 10 தொகுதிகளில் வெல்லும் என, தி.மு.க.,வினர் பலர் என்னிடமே கூறியுள்ளனர். தொகுதிகளின் எண்ணிக்கையை, அ.தி.மு.க., தலைமையுடன் பேசி தேசிய தலைமை தீர்மானித்தது.
எந்தெந்த தொகுதிகள் என்பதை, அ.தி.மு.க., தலைமையுடன் பேசி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன், நான், தேர்தல் பொறுப்பாளர் பீயூஷ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய குழு முடிவு செய்தது.
கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்ததால், எவ்வளவு போராடியும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தான் அனைத்தையும் முடிவு செய்தோம்.
ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவிப்பதில், ஏன் அவ்வளவு தாமதம்?
தாமதம் என்று சொல்ல முடியாது. ஒரு தொகுதிக்கு பலர் போட்டியிட விரும்பினர். பெரும்பாலான தொகுதிகளில் மாவட்ட தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 27 தொகுதிகளில் ஐந்து பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். பட்டியலின தொகுதிகளில், பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இதனால், வேட்பாளர்களை இறுதி செய்ய கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதலில் 60 தொகுதிகள் தர ஒப்புக்கொண்டு, கடைசியில் 27 மட்டும் தந்தார் என்று, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். இது உண்மையா?
தொகுதி பங்கீடு குறித்து ஊடகங்களில் பல்வேறு தவறான தகவல்கள் வருகின்றன. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பல இடங்களில் பா.ஜ., கூட்டணி இரண்டாவது இடம் பெற்றது. அங்கெல்லாம் நாங்கள் அதிக கவனம் செலுத்தி களப்பணி செய்தோம். எல்லா கட்சிகளுமே அதிக இடங்களில் தான் போட்டியிட விரும்பும், அதுபோலவே பா.ஜ.,வும் விரும்பியது. கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.
தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா உங்கள் தோழி; அருகருகே வசிப்பவர்கள். அவரை, தி.மு.க., கூட்டணிக்கு செல்லாமல் தடுக்க முயற்சிக்கவில்லையா?
இல்லை. கட்சி தலைமை எனக்கு என்ன வேலை கொடுத்ததோ, அதை மட்டுமே செய்தேன்.
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது, பா.ஜ.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? அவரை பிரசாரத்திற்கு அழைப்பீர்களா?
தேர்தலில் போட்டியிடாததற்கான காரணங்களை, தம்பி அண்ணாமலை தெளிவுபடுத்தி விட்டார். அவர், தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து, தே.ஜ., கூட்டணியை வெற்றி பெற வைப்பார். எனக்காக பிரசாரம் செய்ய அவரை அழைப்பேன். இந்த அக்காவுக்காக, தம்பி அண்ணாமலை பிரசாரம் செய்வார். அவரை வைத்து, தே.ஜ., கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், அண்ணாமலை மிக தெளிவாக இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்துள்ளதாக எதை வைத்து சொல்கிறீர்கள்?
தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து கொண்டிருக்கும் கட்சி. கடந்த லோக்சபா தேர்தலில், 11 சதவீத ஓட்டுகளைப் பெற்று, மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளோம். அ.தி.மு.க., - தி.மு.,க.,வுக்கு அடுத்து, 60,000க்கும் அதிகமான ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்துள்ள கட்சி பா.ஜ., மட்டுமே. இது வளர்ச்சியின் அடையாளம் தானே.
சிறுபான்மை தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை தடுக்க, மத்திய அரசு சதி செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறாரே...
சிறுபான்மையினர் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்யும் குறுகிய அரசியல் நோக்கத்தோடு, பா.ஜ., மீது ஸ்டாலின் பழி சுமத்தியிருக்கிறார். உண்மையிலேயே சேவை செய்யும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
ஆனால், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியைக் கொண்டு, நாட்டின் வளர்ச்சி, அமைதி, மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சில அமைப்புகள் செயல்படுகின்றன. வளர்ச்சி திட்டங்களை முடக்க போராட்டங்களை துாண்டுகின்றனர்.
இதை தடுக்கவே, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டப்படி செயல்படுபவர்களுக்கு, பா.ஜ., ஆட்சியில் எப்போதும் பிரச்னை இருக்காது. அதேநேரத்தில், நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் தப்ப முடியாது.
நடிகர் விஜய் தன் பிரசாரத்தில், மத்திய அரசை விமர்சிப்பதில்லை. இதனால், அவர் பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதாக, தி.மு.க., விமர்சிக்கிறது. தேர்தலுக்கு பின் ஏதேனும் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
நடப்பது சட்டசபை தேர்தல். யாரை தோற்கடிக்க வேண்டுமோ, அவர்களைப் பற்றிதான் தேர்தல் களத்தில் பேசுவர். யாருடனும் மறைமுக கூட்டு வைக்கும் வழக்கம் பா.ஜ.,வுக்கு இல்லை. யார் யார் நேரடி கூட்டணி வைத்துள்ளனர், மறைமுக கூட்டணி வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை அக்காவை அழகாக வரைந்துள்ளீர்கள் நன்றி. தாமரை மலர்ந்தே தீரும் என்று மூச்சிற்கு மூச்சு பேசியவர். சுகமான கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து தேர்தலில் நிற்கிறார். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்மேலும்
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
-
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்
-
செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!