என் மனைவிக்கு இரட்டை குடியுரிமையா? பாக்., உடன் சேர்ந்து சதி செய்கிறது காங்., : அசாம் முதல்வர் விளக்கம்

குவஹாத்தி: “என் மனைவிக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் சுமத்தி உள்ள பொய் குற்றச்சாட்டில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமின் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளார். இங்குள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.

இந்த சூழலில், டில்லியில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவின் தலைவர் பவன் கெரா, 'ஹிமந்த பிஸ்வ சர்மாவின் முழு அரசியலும் முஸ்லிம்களுக்கு எதிரானது.

'ஆனால், அவர் மனைவி ரின்கி பூயான் சர்மா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட இரு முஸ்லிம் நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்துள்ளார். இந்திய அரசியலமைப்பு படி, நம் நாட்டு பிரஜை, இரட்டை குடியுரிமை வைத்திருப்பது சட்டவிரோதமானது' என, தெரிவித்திருந்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோயும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். 'ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவில் சொத்துக்கள் உள்ளன.

'இந்த சொத்துக்கள் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் சர்மா, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார். இந்த குற்றச்சாட்டுகளை ஹிமந்த பிஸ்வ சர்மா மறுத்துள்ளார்.

குவஹாத்தியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என் மீதும், என் மனைவி மீதும் காங்., கட்சியினர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஊடக குழு உள்ளது. கடந்த 10 நாட்களில், ஒரு பாகிஸ்தான் 'டிவி', அசாம் தேர்தல் தொடர்பாக 11 விவாத நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

இதுவரை, இதுபோல் நடந்தது இல்லை. விவாத நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றின் முடிவிலும், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது.

எனவே, காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்புக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. சட்ட அமலாக்க நிறுவனங்கள், இந்த விவகாரத்தை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன்.

அவர்கள் வைத்த குற்றச்சாட்டின் போது, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் போலியாக தயாரிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

போலி ஆவணங்களை கொண்டு பொதுமக்கள் முன் குறிப்பிட்ட விவகாரத்தை எழுப்பினால், அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் கீழ் குற்றமாக கருதப்படும்.

ஒரு தேர்தலின் முடிவு அல்லது விளைவை மாற்றி அமைக்கும் நோக்கில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி, என் மனைவி மீது பொய்க் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடக குழுவிடம் இருந்து பெறப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களின் படங்களை காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தி உள்ளனர். அசாம் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயல்வது ஏன்? கவுரவ் கோகோய்க்கு அந்நாடு உதவுவது ஏன்?

இது குறித்து என் மனைவி போலீசில் அளித்த புகாரின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement