இருங்காட்டுக்கோட்டை மேம்பாலத்தால் நெரிசல் தீரும்! 4 மணி நேரத்தில் பெங்களூரு பறக்கலாம்
காஞ்சிபுரம்,:சென்னை - பெங்களூரு ஆறுவழி சாலை மற்றும் அதிவிரைவு சாலையை இணைக்கும் வகையில், 120 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிவுற்றால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும். சென்னையில் இருந்து பெங்களூரு வரை தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் ஆகிறது.
பயண நேரத்தை குறைக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை வழியாக பெங்களூருக்கு செல்ல, 7,406 கோடி ரூபாய் செலவில், நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வாகன நெரிசல்
நான்கு பிரிவுகளாக போடப்படும் சாலையில், மூன்று பிரிவு சாலை பணிகள் முடிந்துள்ளன. மற்றொரு பிரிவில் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இந்த பணி நிறைவு பெற்றால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், அதிவிரைவு சாலை மூலமாக பெங்களூரு சென்றடையலாம்.
இது, ஒருபுறம் இருக்க சென்னை - பெங்களூரு இடையே, நான்கு வழி சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகிறது.
மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரமும், காரப்பேட்டை- - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரமும் சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துார சாலை விரிவுபடுத்தும் பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதம் சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலை போடும் பணிகள், முகூர்த்த நாட்கள், விழா நாட்களில் காலை மற்றும் மாலை, பீக் ஹவரில், இருங்காட்டுக்கோட்டை முதல் பூந்தமல்லி வரையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
ரூ.120 கோடி
இதை தவிர்க்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, இருங்காட்டுக்கோட்டை பகுதியில், 120 கோடி ரூபாய் செலவில், ரவுண்டானா மேம்பாலம் அமைக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கி உள்ளது.
இந்த ரவுண்டானா மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றவுடன், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை செல்லும் வாகனங்கள் என, தனித்தனியாக பிரிந்து செல்லும்.
குறிப்பாக, பெங்களூரு பகுதியில் இருந்து, சென்னை அதிவிரைவு சாலை வழியாக சென்னை நோக்கி வரும் வாகனங்கள் இருங்காட்டுக்கோட்டை ரவுண்டானா மேம்பாலம் வழியாக இறங்கி, சென்னை - பெங்களூரு ஆறுவழி சாலை வழியாக இணைந்து, சென்னைக்கு செல்லும்.
அதேபோல, சென்னையில் இருந்து பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு செல்லும் வாகனங்கள் இருங்காட்டுக்கோட்டை ரவுண்டானா மேம்பாலம் வழியாக சுற்றி சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை வழியாக பெங்களூருக்கு செல்லும். அதற்கேற்ப ரவுண்டானா மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
திட்டம்
இதுகுறித்து, சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி கூறியதாவது:
சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை மற்றும் சென்னை - பெங்களூரு ஆறுவழி சாலை இணையும் வகையில், 120 கோடி ரூபாய் செலவில் ரவுண்டானா மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த வளர்ச்சி பணிகளை, சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை துறையினர் டெண்டர் விட்டு கடந்த ஆண்டு துவக்கியுள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன், ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை