கள்ளக்குறிச்சி தொகுதியை மீட்டெக்க வேண்டும்:  தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியை இந்தமுறை மீட்டெக்க வேண்டும் என தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தியாகதுருகம் தெற்கு ஒன்றியம் முடியனுார் ஊராட்சிக்குட்பட்ட குரூர் உட்பட பல்வேறு கிராமங்களில் வி.சி., வேட்பாளர் மாலதியை ஆதரித்து தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் நேற்று பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது; மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் மாலதிக்கு, ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம பெண்கள் எழுச்சியுடன் வற்வேற்பு அளிக்கின்றனர். இவர் வெற்றி பெற்றால் மக்கள் குறைகள், பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் எடுத்துரைத்து, மக்களின் குரலாக எதிரொலிப்பார்.

தேர்தலுக்கு பின் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையும். மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மகளிருக்கு 5 ஆயிரம் வழங்கியுள்ளார். தேர்தலுக்கு பின் 8 ஆயிரம் வழங்க உள்ளார். தேர்தலுக்கு பின் மகளிர் உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். கள்ளக்குறிச்சி தொகுதியை இந்த முறை மீட்டெக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் பல்வேறு கிராமங்களில்கூட்டணி கட்சியினர் ஓட்டு சேகரித்தனர். இதில் தேர்தல் பொறுப்பாளர் தாமரைக்கண்ணன், தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், இளங்கோவன், முருகன், கலியன், பாஷா, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன், ஒன்றிய செயலாளர் கலையமுதன், நிர்வாகிகள் பலராமன், சின்னதுரை, மாலதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement