குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

3

-டில்லி சிறப்பு நிருபர்-

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பான வழக்கில், மத்திய அரசு மற்றும் தொடர்புடைய அமைப்புகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளின் உண்மையான உற்பத்திச் செலவை விட குறைவாக இருப்பதாகவும், எனவே, அதை சீரமைக்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வர்த்தக ஒப்பந்தம்





மேலும், அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சமீபத்தில் கையெழுத்தான இந்தியா- - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாதது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கிறது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையானது, சாகுபடிக்கான சராசரி உற்பத்தி செலவை விட, கணிசமான அளவுக்கு குறைவாக உள்ளது. எனவே, உற்பத்திச் செலவின் அடிப்படையில் பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற, உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபத்தை சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தாலுகா, மற்றும் கிராம அளவில் கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுதாக தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

உற்பத்தி செலவு




அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முன் வைத்த வாதம்:
வேளாண் விளைப்பொருட்களுக்கான உற்பத்தி செலவு கூட விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. இதனால், அவர்கள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மஹாராஷ்டிராவில் மட்டும் கடன் சுமையால், 17,000 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அரிசி, கோதுமை சாகுபடிக்கு செலவாகும் தொகையை விட, பயிர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை மிக குறைவாக இருக்கிறது. எனவே, இதை மாற்றி அமைக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் போது, மாநிலங்களின் பரிந்துரைகள் மற்றும் அந்தந்த மாநிலங்களின் உண்மையான உற்பத்திச் செலவுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுவதால், சிறுதானியங்கள் போன்ற இதர பணப் பயிர்களின் தேவை குறைந்து, சந்தை விலை செயற்கையாக குறைக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இவ்வாறு அவர் வாதிட்டார்.

சாத்தியமற்றது




அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'பொருளாதார கொள்கையை உச்ச நீதிமன்றம் திருத்தி எழுத வேண்டும் என சொல்கிறீர்களா? மாநிலத்திற்கு மாநிலம், நிலம் மற்றும் மூலதனத்தின் செலவுகள் மாறுபடுகின்றன.

'பெரும் பரப்பளவு கொண்ட நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளும் நாட்டில் இருப்பதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான கொள்கையை வகுப்பது சாத்தியமற்றது' என்றனர்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement