ஓய்வு பெற்ற நடத்துநரை தாக்கிய வாலிபர் கைது

புழல்: கட்டுமான பொருட்களை வீட்டருகே வைப்பதில் ஏற்பட்ட தகராறில், ஓய்வு பெற்ற நடத்துநரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புழல், காவாங்கரை, பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன், 62. ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்து கழக நடத்துநர். இவர், தன் வீட்டிற்கு அருகே புதிதாக ஒரு வீட்டை கட்டி வருகிறார்.

கட்டுமானப் பொருட்களை வீட்டருகே வைத்துள்ளார். இதனால் இவரது வீட்டருகே வசிக்கும் பிரேம்நாத் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நடைபயிற்சி சென்ற கருணாகரனை, பிரேம்நாத் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதுடன், கை மற்றும் கம்பால் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த கருணாகரன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று பிரேம்நாத், 36 என்பவரை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரேம்நாத் மீது ஏற்கனவே 10 வழக்குகள் உள்ளன.

Advertisement