வேளச்சேரிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் செய்து தருவார் நடிகர் ரவி மரியா பிரசாரம்

வேளச்சேரி: ''அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் வெற்றி பெற்றால், வேளச்சேரி தொகுதியில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வருவார்,'' என, நடிகர் ரவிமரியா கூறினார்.

வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக்கை ஆதரித்து, நடிகர் ரவிமரியா, திருவான்மியூர் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இந்த தொகுதியில் பிரசாரம் செய்ய, நானாக நேரம் கேட்டு வாங்கினேன். எதற்காக என்றால், வேட்பாளர் அசோக், நல்ல மனிதர் மட்டுமின்றி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து சிந்திக்க கூடியவர் என்பதால்தான்.

ஏற்கனவே இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மீண்டும் இவரை வெற்றி பெற செய்தால், தொகுதி மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படுவதுடன், புதிய வளர்ச்சி திட்டங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

அதேபோல், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமியும், இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், பல திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்து முதல்வரானதும் தெரிவித்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவேன் என, அவர் என்னிடம் கூறினார்.

அ.தி.மு.க.,வுக்கு தமிழகம் முழுதும் பெரும் வரவேற்பு உள்ளது. ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் சமூக சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அச்சுறுத்தல்கள், போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளன. குறிப்பாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றன.

மக்கள் நிம்மதியாக வாழ, ஆட்சி மாற்றம் தேவை. அதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடந்து வேட்பாளர் அசோக், திருவான்மியூர், வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில், பிரசாரம் செய்தார். அப்போது, பகுதிமக்கள் கூறிய கோரிக்கைகளை ஏற்று, தான் வெற்றி பெற்றதும் நிறைவேற்றி தருவதாக, வாக்குறுதி அளித்தார்.

பிரசாரத்தின்போது, பகுதி செயலர்கள் மூர்த்தி, கணேசன், வட்ட செயலர்கள் பிரபுதாஸ், தேவதாஸ், குமரன், மகேஷ், வெங்கடேஷ் மற்றும் பா.ஜ.,வில் சாய்ராம் லட்சுமி, சிவகுமார், பா.ம.க.,வின் ஜெனார்த்தனன், பகுதி செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement