கள் இறக்கிய நபர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

தென்காசி: ஆலங்குளம் அருகே கள் இறக்கிய நபருடன் ஏற்பட்ட தகராறில் போலீசார் துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட மருதம்புத்தூரை சேர்ந்த பெருமாள் சேட் மகன் மணிகண்டன் (35), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் அனுமதி இன்றி கள் இறக்கியதாக புகார் எழுந்தது.

எஸ்.ஐ. இசக்கி ராஜா போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது பனைமரத்தில் இருந்த மணிகண்டனை கீழே இறங்குமாறு கூறினர்.

மணிகண்டனின் அண்ணன் பொன்ராஜ் மும்பையில் வசிக்கிறார். அவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.அவர்களில் ஒரு சிறுவன் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சிறுவனை போலீசார் தாக்கியுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. மணிகண்டன் போலீசாரை தாக்கியுள்ளார்.

இதனால் இசக்கி ராஜா துப்பாக்கியால் மணிகண்டனின் காலில் நான்கு முறை சுட்டார். இதில் இரண்டு தோட்டாக்கள் கால்களில் பாய்ந்தன; இரண்டு குறிதவறின. அவற்றை போலீசார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது.

காயமடைந்த மணிகண்டன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இசக்கி ராஜாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தேர்தல் காலம் என்பதால் சம்பவம் தொடர்பாக பதற்றம் நிலவி வருகிறது.

ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement