ஆசிரியருக்கு'கீரின் சாம்பியன்' விருது

ஆனைமலை: பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியரும், பசுமைப்படை பொறுப்பாசிரியருமான பாலமுருகனுக்கு,தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'கிரீன் சாம்பியன்' விருது வழங்கப்பட்டது. இவ்விருதுடன் பரிசு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

பாலமுருகன் கூறுகையில், ''இவ்விருதுக்குசொந்தக்காரர்கள் எனது மாணவர்கள் தான். ஒவ்வொரு மரக்கன்றையும் பராமரித்து, அதற்கு பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலையில் குடங்கள் வாயிலாக நீருற்றி பாரமரித்தனர். இந்த பரிசுத்தொகை மற்றும் இதற்கு முன்பு கோவையை சேர்ந்த தலைமையாசிரியர் ஜெகன்நாதன் நினைவாக கிடைத்த சிறந்த ஆசிரியருக்கான பரிசுத்தொகை, 50,000 ரூபாய் ஆகியவற்றை கொண்டு, இரண்டு லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு கலையரங்கம் கட்ட திட்டமிட்டு உள்ளேன்,'' என்றார்.

பள்ளியில் ஊட்டச்சத்து திரவ உணவு பொள்ளாச்சி: தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஊட்டச்சத்து திரவ உணவு வழங்கும் வகையில் தலைமையாசிரியர் கணேசன், பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் இயற்றி பெற்றோர் செயலியில் பதிவு செய்து இருந்தார்.

கோரிக்கையை ஏற்று, 'நம்ம பள்ளி, நம்ம ஊரு பள்ளி' என்ற முன்னோடி திட்டத்தின் வாயிலாக, ஊட்டி இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான ஆனந்தகுமார், 15 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பால் சார்ந்த உணவினை, தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் வாயிலாக கொடுக்க அறக்கட்டளை சார்பில் நிதி உதவி செய்தார்.

தினமும் காலை, 11:00 மணிக்கு ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. பொறுப்பாளர் ஜெனிபிரின்ஸ், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் பொள்ளாச்சி: கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கு தலைமையாசிரியர் தினகரன் தலைமை ஏற்றார்.

நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் அவற்றின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், 'சிட்டுக்குருவிகளை காப்போம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம்' என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நடந்த கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். அதன் பின் விழிப்புணர்வு கோஷங்கள் பதாகைகள் வாயிலாக, சிட்டுக் குருவி பாதுகாப்பின் அவசியத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் நடவடிக்கைகள் நடந்தது.

கல்லுாரியில் நினைவு சொற்பொழிவு பொள்ளாச்சி: சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், கல்லுாரி முனைவர் சேட்டு நினைவு சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி செயலர் சேதுபதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் விஜயமோகன் பேசினார்.

தன்னம்பிக்கை பேச்சாளர் ராமகிருஷ்ணன், வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற்றம் பெறுவதற்கு தேவையான மனப்பாங்கு, கடின உழைப்பு, சமூக பொறுப்பு குறித்தும், மாணவர், ஆசிரியர் உறவு குறித்து விளக்கினார்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவர்கள் தேர்வு செய்த பள்ளி ஆசிரியர்களுக்கு சமுதாய சிற்பி விருது வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் வனிதா மணி நன்றி கூறினார்.

கேசவ் வித்யா மந்திரில் பட்டமளிப்பு விழா பொள்ளாச்சி: கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், 32வது பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளித்தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ், அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர். சமூக செயல்பாட்டாளர் டாக்டர் தனலட்சுமி, கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், சமூகப்பொறுப்புணர்வு குறித்து விளக்கினார். பட்டமளிப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் பொள்ளாச்சி: ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு சார்பில், பசுமை காவலர் சான்றிதழ் விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா நடந்தது.

வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார்.லயன்ஸ் கிளப் சங்க செயலாளர் ஜெகதீஸ்வரன், மாணவர்களை பாராட்டினார்.

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் சசிகுமார், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கீதா ஆகியோர் பேசினர்.

வீடுகளில் அதிகமாக மரக்கன்றுகள், மூலிகைகள் வளர்த்தல், விதைப்பந்துகள் தயாரித்த, 25 மாணவர்களுக்கு பசுமை காவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிக்கு சூழலியல் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும், இப்பள்ளி மாணவர்கள் 31 பேர், மாநில அளவிலான அறிவியல் திறனறித்தேர்வு எழுதினர். கோவை மாவட்ட துளிர் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய திறனறித்தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement