ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இரு வெப்கேமராக்கள் இருக்கும்
வால்பாறை: வால்பாறை சட்டசபை தொகுதியில் மொத்தம் உள்ள 262 ஓட்டுச்சாவடிகளில், 524 வெப்கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் ஏப்.23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. வால்பாறை சட்டசபை தொகுதியில் மொத்தம், 1,72,284 வாக்காளர்கள் உள்ளனர். இதில், வால்பாறை மலைப்பகுதியில், 75 ஓட்டுச்சாவடிகளும், சமவெளிப்பகுதியான ஆனைமலையில், 187 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. இந்நிலையில், வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த முறை ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் தலா ஒரு வெப் கேமரா பொருத்தப்பட்டது.
ஆனால், இந்த முறை அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் தலா இரண்டு வெப்கேமரா பொருத்தப்படவுள்ளது. மேலும், தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வசதியாக வரும், 10ம் தேதி முதல் அந்த ஓட்டுச்சாவடி வாயிலாக 'பூத் சிலிப்' வழங்கப்படும்,' என்றனர்.