உள்வாங்கிய விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவக்கம்

சிதம்பரம்: விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று பாலம் அருகே உள்வாங்கிய சாலை பணி துவங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் -நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்று பாலம் அருகே, பாலத்தின் இணைப்பு மேம்பாலம் திடீரென உள்வாங்கியது. 25 அடி துாரம் சாலை, 10 அடி உள் வாங்கி விரிசல் ஏற்பட்டது.

யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாதிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால், சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடியிலிருந்து சீர்காழி வரை, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வல்லம்படுகை வழியாக மீண்டும் பழைய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் நகாய் அதிகாரிகள் சம்பவ இடத்தில் சாலையை செப்பனிடும் பணியை துவங்கி நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக சாலையின் பக்கவாட்டில், இன்டர்லாக் முறையில் அமைக்கப்பட்டுள்ள, மெகா கற்கள் மற்றும் சிறிய கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகப்பெரிய ஹிட்டாச்சி இயந்திரங்கள் மற்றும் கிரேன் மூலம் பெரிய கற்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. சாலை உள்வாங்கி சரிந்த பகுதியில் முற்றிலுமாக அகற்றப்பட்டு மீண்டும் சாலை அமைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பணிகள் ஒரு மாத காலத்தில் முடியும் என நகாய் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் அவ்வளவு விரைவாக இதனை முடிக்க முடியாது என இந்த பாதிப்பு குறித்து தெரிந்த அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாலை உள்வாங்கியதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் தற்போது வரை விழி பிதுங்கி நிற்கின்றனர்.

படிப்படியாக தடுப்புச்சுவர் மற்றும் அப்பகுதியில் உள்ள மணல் அனைத்தும் அகற்றப்பட்டால் மட்டுமே சாலை உள்வாங்கியதற்கான காரணத்தை அறிய முடியும்.

மீண்டும் செப்பனிடும் போது சரியான முறையில் தரமாகவும் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலை துவங்கியதை எடுத்து சாலையின் பக்கவாட்டு சுவரில் அருகிலுள்ள ஏருக்கள் காட்டு படுகை கிராமத்தின், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை அங்கிருந்து காலி செய்ய உத்தரவிட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்பொழுது நகாய் சார்பில் புதிய செட் அமைத்து தரும் பணிகள் நடந்து வருகிறது.

அது மட்டுமில்லாமல் அந்த தடுப்பு சுவற்றில் அருகே உள்ள இடங்களை கையகப்படுத்தும் முடிவை நகாய் அதிகாரிகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை பயன்பாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இணைப்பு சாலையில் நெய்வேலியில் இருந்து சாம்பல் மண் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று சாம்பல் மண்கள் உறுதியான மணத்தன்மை உள்ள சாயல் பகுதிகளில் பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது.

ஆனால் நம் பகுதி காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இப்பகுதி பெரும்பாலும் கழிப்பு பகுதியாக உள்ளது. சாதாரணமாக சாலைகள் அமைத்தாலே மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு பூமிக்குள் இறங்கி, ஆனால் இது போன்ற மெகா கட்டுமான சாலைகளை அலட்சியமாக கட்டமைப்பு செய்துள்ளது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சாலை பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கி ஒரு ஆண்டுகள் கடந்த நிலையிலேயே இந்த நிலை என்றால்இன்னும் வரும் காலங்களில் இந்த சாலையின் நிலை எப்படி இருக்குமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



Advertisement