தி.மு.க.,வை புறக்கணிப்போம் ;விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு

அன்னூர்: 'சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பது,' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோவை மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் அன்னூரில் சத்தி சாலையில் சாமுத்திரிகா மகாலில் நடைபெற்றது. சங்கத்தின் வடக்கு மாவட்டச் செயலாளர் விவேக் தலைமை வகித்தார்.

சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேசுகையில், வருகிற சட்டசபை தேர்தலில், அனைத்து விவசாயிகளும் தி.மு.க., வுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அறிவித்த 83 விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளில், பத்து வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 73 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளை புறக்கணித்ததற்காகவும், ஒரு அடி நிலத்தை கூட விவசாயிகளின் அனுமதி இல்லாமல் எடுக்க மாட்டேன் என்று கூறி, தற்போது 2,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை சிப்காட் திட்டத்திற்கு கையகப்படுத்த முயற்சித்ததற்காகவும் தி.மு.க.,வை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கூட்டத்தில் அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்திய கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டிக்கிறோம். உயர்மின் கோபுரங்களுக்கு பதில் சாலையோரமாக புதை வட கேபிள் அமைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் விவசாய நிலத்தை அபகரிக்கும் தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிப்பது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில் ஐந்து சிப்காட் தொழிற்பேட்டைகளை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டோர் பிரிவு நிர்வாகி நடராஜன், மண்டல நிர்வாகி ஜோதி அருணாசலம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் உள்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement