பல மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய மகளிர் கழிப்பறைகள் இல்லை
புதுடில்லி:டில்லியின் முக்கிய இடங்களில் மகளிருக்கென தனியான கழிப் பறைகள் இல்லை. இதனால், பல மணி நேரம் சிறுநீர் கூட போகாமல், பெண்கள் அவதிப்படுகின்றனர் என, பெண்கள் உடல் நலம் பேணும் அமைப்பினர் மற்றும் பெண்கள் கூறுகின்றனர்.
டில்லியில் வாழும் ஆயுஷி கூறும் போது, ''டில்லியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், பாதிக்கப்படும் பெண்களில் நானும் ஒருத்தி. மெட்ரோ ரயில் வாயிலாக பணிகளுக்கு செல்லும் பெண்களில் பலர், மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் கழிப்பறைகள் இல்லாததால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
''அவ்வாறு இருக்கும் ஒரு சில கழிப்பறைகளும் போதிய வசதிகளுடன் இருப்பதில்லை. இதனால், சுத்தம், சுகாதாரமற்ற இடங்களில் பெண்கள் தங்கள் அவசர தேவைக்கு பயன்படுத்த வேண்டிய அவலம் நிலவுகிறது,'' என்கிறார்.
அதுபோலவே, சீமா, 36, என்ற பெண்ணும் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், ''மெட்ரோ ரயில் நிலையங்கள் சிலவற்றில் பெண்களுக்கு என தனியான கழிப்பறைகள் உள்ளன. அங்கு, சிறுநீர் கழிக்க, 2 ரூபாய்; மலம் கழிக்க, 5 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், அங்கிருப்போர், சிறுநீர் கழிக்கக் கூட, 5 ரூபாய் வசூலிக்கின்றனர்,'' என்றார்.
டில்லியின் ஜாபராபாத் பகுதியை சேர்ந்த மரியம், 17, என்ற பெண் கூறும் போது, ''என் தாய் சிறிய கடை ஒன்றை நடத் துகிறார். அந்த கடை இருக்கும் பகுதியிலும் கழிப்பறைகள் கிடையாது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையில் இருப்பதில்லை. அதனால் என் தாய் கஷ்டப்படுவது போல, நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்,'' என்றார்.
அஜய்ரானா என்ற மகளிர் மருத்துவம் பார்க்கும் டாக்டர் கூறும் போது, ''பெண்கள் நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதால் எழும் பிரச்னைகள் ஏராளம். அதனால், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் பை எனும் பிளாடரில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போதைக்கு இந்த நிலைமை சரி செய்யப்பட்டாலும், நீண்ட காலத்திற்கு பின் பிரச்னை தான்,'' என்றார்.