தொழில் போட்டியில் தாக்குதல் மூன்று பேர் சிக்கினர்

சைதாப்பேட்டை: தொழில் போட்டியில் வாலிபர்களை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சைதாப்பேட்டை, சாரதி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித், 25. இவர், மேளம் அடிக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கும், சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடியைச் சேர்ந்த மேளம் அடிக்கும் சிலருக்கும், தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 5ம் தேதி இரவு, இவர் நண்பர் விஷ்வாவுடன், சாரதி நகர் வழியாக நடந்து சென்றார். அப்போது, ஒன்பது பேர் கும்பல், இருவரையும் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

பலத்த காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சைதாப்பேட்டை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, சைதாப்பேட்டை, கொத்தவால் சாவடி தெருவைச் சேர்ந்த சூர்யா, 18, நிதீஷ் குமார், 21, அஜய்குமார், 18, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான ஆறு பேரை தேடுகின்றனர்.

Advertisement