பாக்., பல துண்டுகளாக சிதறும் அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை

புதுடில்லி: ''எங்கள் மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும்,'' என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்புக்கு நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள் தகர்த்தன.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நம் நாட்டின் எல்லை பகுதிகளில் பாக்., நடத்திய தாக்குதல்களை நம் படைகள் முறியடித்தன. நம் தாக்குதலை சமாளிக்க முடியாத பாக்., கெஞ்சியதை அடுத்து சண்டை முடிவுக்கு வந்தது.

சமீபத்தில், பாகிஸ்தானின் சியால்கோட்டில், அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், ''எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் சும்மா இருக்க மாட்டோம். எல்லையில் மட்டுமின்றி கொல்கட்டா வரை தாக்குதல் நடத்துவோம்,'' என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று கூறியதாவது:

பா கிஸ்தானின் இத்தகைய துாண்டுதல் பேச்சுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும். பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இதுபோல பேசியிருக்கக் கூடாது. 55 ஆண்டுகளுக்கு முன், பாக்., இரண்டாக பிரிந்தபோது, அதன் விளைவுகளை அந்நாடு அனுபவித்தது. இந்த முறை மேற்கு வங்கத்தின் மீது கை வைக்க முயன்றால், அந்நாடு எத்தனை துண்டுகளாக சிதறும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement